/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சிக்னல்கள், துார்வாராத வாறுகால்
/
செயல்படாத சிக்னல்கள், துார்வாராத வாறுகால்
ADDED : ஆக 01, 2025 01:54 AM

சிவகாசி: செயல்படாத டிராபிக் சிக்னல்கள், துார்வாராத வாறுகால் என சிவகாசி சாத்துார் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் இருந்து பஸ் ஸ்டாண்ட், சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு பிரிந்து செல்கின்றது. நகருக்குள், பஸ் ஸ்டாண்டுக்கு வர வேண்டிய அனைத்து வாகனங்களும் இதன் வழியாகத்தான் வரவேண்டும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட நாளிலிருந்து டிராபிக் சிக்னல் செயல்படவில்லை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நிலையில் விசேஷ காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் அருகிலேயே டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. சாத்துார் ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. சாத்துார் ரோடு விலக்கிலிருந்து கிழக்கு மயான சாலை செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.
மகேஸ்வரன், தொழிலதிபர்: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் துார்வார வில்லை. பெரும்பான்மையான இடங்களில் வாறுகாலில் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேட்டையும் ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை துார்வார வேண்டும்.
ஆத்தீஸ்வரன், தொழிலதிபர்: சிவகாசி பஸ் ஸ்டாண்டு எதிரே சாத்துார் செல்லும் ரோட்டில் டூவீலர்கள் அதிகமாக நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் ரோட்டோரத்தில் உள்ள சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.
குமார், ஆட்டோ உரிமையாளர்: சாத்துார் ரோட்டில் உள்ள பஸ் டிப்போ அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை உடனடியாக அகற்றாததால் ரோட்டிற்கு வந்து விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.