/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலையை ஒட்டி முளைக்கும் கடைகள் ஆக்கிரமிப்பு...: கண்காணிப்பு இல்லாததால் தொடரும் விபத்து
/
நெடுஞ்சாலையை ஒட்டி முளைக்கும் கடைகள் ஆக்கிரமிப்பு...: கண்காணிப்பு இல்லாததால் தொடரும் விபத்து
நெடுஞ்சாலையை ஒட்டி முளைக்கும் கடைகள் ஆக்கிரமிப்பு...: கண்காணிப்பு இல்லாததால் தொடரும் விபத்து
நெடுஞ்சாலையை ஒட்டி முளைக்கும் கடைகள் ஆக்கிரமிப்பு...: கண்காணிப்பு இல்லாததால் தொடரும் விபத்து
ADDED : ஜூலை 26, 2025 03:22 AM

ராஜபாளையம்:- மாவட்டத்தில் ரோட்டோரங்களை ஆக்கிரமிப்பு கடை விரிக்கும் வியாபாரிகளால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில நகரங்களை அடுத்து உள்ள நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் என மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வடமாநில வியாபாரிகள், தற்காலிக கடை விரிப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
இவர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்த பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து சில்லறை வியாபாரிகளை அணுகி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இவை அந்தந்த நேரங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும். குளிர் மழை காலங்களில் ரெயின் கோட், ஸ்வெட்டர், ஜெர்கின், கம்பளி, தரை விரிப்புகள் போன்றவை ஆகும்.
இது தவிர மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொம்மைகள், சேர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மின் விளக்குகள், நைலான் ஊஞ்சல் போன்றவற்றையும் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.
இதற்காக வட மாநிலத்தவர்களை அழைத்து வந்து மெயின் ரோட்டு ஓரங்களில் ஆங்காங்கு தற்காலிக கடைகளை விரிக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.
சாலையோரம் விரிக்கும் கடைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரோட்டின் வெள்ளை அபாய கோடு வரை கடை பரப்பி வைக்கின்றனர்.
இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி பேரம் பேசுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.
சாலைகளின் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக கடை பரப்பி நிற்கும் இது போன்றவர்களை போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்வதில்லை.
இவர்களின் விதி மீறலால் ஏதும் அறியா வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதை தடுக்க வேண்டும். ரோட்டில் இருந்து சற்று தொலைவில் கடைகள் அமைப்பது குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

