/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்
/
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள்
ADDED : ஜன 02, 2025 04:36 AM

சிவகாசி: சிவகாசியில் பொத்தமரத்து ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விரைவாக ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரும் பணியை மேற் கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொத்தமரத்து ஊருணியை துார்வாரி, கரைகளில் நடை மேடையுடன் கூடிய பூங்கா அமைப்பதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊருணியை துார்வாரும் பணிக்கான பூமி பூஜை 2022 மே ல் நடந்தது. நில அளவீடு செய்தபோது 4.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊருணியில் 35 சதவீதத்துக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள், வணிகக் கடைகள் என 83 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பது தெரியவந்தது.
நமக்கு நாமே திட்டத்தில் ஊருணியில் உள்ள கழிவுகளை அகற்றிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் தொடர்மழை காரணமாக துார்வாரும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
2023 ஏப்.ல் ஊருணியை ஆய்வுசெய்த கலெக்டர் ஜெயசீலன் ஆக்கிரமிப்பு களை விரைந்து அகற்றி துார்வாரும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் இடிக்கும் பணிகள் தொடங்கின. மேற்குப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள், தெற்கு கரையில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன. நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக வருவாய்த் துறை சார்பில் 43 பேருக்கு எம்.புதுப்பட்டி அருகே இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீடுகளை இடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வீடுகளை காலி செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊருணி வடக்கு கரை பகுதி மக்கள், மாடசாமி கோயில் வகையறா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஊருணி துார்வாரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் ஊருணியை துார்வாருவதில் ஏற்படும் தாமதத்தை காரணமாகக் கூறி, 2014 செப். 10 நடந்த மாநகராட்சி கூட்டத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான ஊருணி துார்வாரும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வர பட்டது.
ஏற்கெனவே பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டியதால்தான் துார்வாரும் பணியில் சிக்கல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய கவுன்சிலர்கள், ஒப்பந்தத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரி வித்தனர். இதைத் தொடர்ந்து அந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது.
இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிரான வழக்கில் 2024 செப். 29 ல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடைகளின் மாடியில் உள்ள மாடசாமி பீடத்தை எடுத்து 4 வாரங்களுக்குள் கரைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
அதன்பின்பு 11 கடைகளுடன் கூடிய கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவு வெளியாகி 3 மாதமாகியும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி ஊருணியை துார்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.