UPDATED : நவ 21, 2026 11:02 PM
ADDED : நவ 21, 2026 08:26 PM

விருதுநகர்: மாவட்டத்தில் திறந்த வெளி கிணறுகள் ரோடு ஓரங்களில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.
விருதுநகரில் வி.எம்.சி., காலனியில் இருந்து புல்லலக்கோட்டை செல்லும் ரோட்டில் திறந்த நிலையில் பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறு மக்கள் பயன்பாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தும் நிரந்தரமாக மூடுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. தற்போது குப்பை தேங்கி சுகாதாரக்கேட்டையும், கொசுத்தொல்லையையும் அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் ரோசல்பட்டி ஊராட்சியின் அரண்மனை கண்மாய் அருகே குமாரபுரம், இந்திராகாலனிக்கு செல்லும் ரோட்டில் திறந்த நிலையில் கிணறு பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதே போல் விருதுநகரின் பாவாலி ரோடு உள்ளிட்ட பல்வேறு ஊரகப்பகுதிகளில் பல கிணறுகள் திறந்த நிலையில் உள்ளன. மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலை கிணறுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த நிலை கிணறுகளை கணக்கெடுத்து அவற்றை விரைந்து மூடி விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
