/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
/
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
திறந்தும் பயன்பாட்டிற்கு வராத நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : நவ 06, 2024 06:58 AM

விருதுநகர், : விருதுநகர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடம் ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் ஆகியோர் ஜூலை 30ல் திறந்து வைத்தனர். ஆனால் இதுவரை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை.
விருதுநகர் பஜார் அருகே நகர் புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 100 ஆண்டுகளை கடந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு மருத்துவம், மகப்பேறு, குழந்தைகள், பிசியோதெரபி, பல் மருத்துவம், தோல், மனநலம் என ஒவ்வொரு கிழமைகளிலும் சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தம், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள், நீர், உப்புச்சத்து, கிருமி, ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.
இதனால் விருதுநகரை சுற்றியுள்ள கர்ப்பிணிகள் 60 முதல் 80 பேர் பரிசோதனை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு மருந்துகள், கணவருக்கு பரிசோதனை, தம்பதிகளுக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 10 பிரசவங்களுக்கு குறையாமல் நடக்கிறது.
இந்நிலையில் இங்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை தனித்தனி நாற்காலிகள் போட்டு அமர வைப்பதற்கு கூட போதிய இட வசதி இல்லை. ஆண், பெண் என இரு கழிவறை மட்டுமே உள்ளது.
இதை தான் ஊழியர்கள், சிகிச்சை, பரிசோதனைக்கு வருபவர்கள் என அனைவரும் பயன்படுத்த வேண்டியுள்ளது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக எந்த கழிப்பறையும் இல்லை.
இந்த நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், கூரைகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இங்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லை.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் பின்புறம் அருப்புக்கோட்டை மேம்பாலம் செல்லும் இடத்தில் ரூ. 45 லட்சத்தில் கூடுதல் அறைகள், காத்திருப்பு அறைகள், முகப்பு தோற்றம், கழிப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் ஆகியோரால் ஜூலை 30ல் திறக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர்கள் திறந்து வைத்து 3 மாதங்களை கடந்தும் இன்று வரை பணிகள் முடிக்கப்படாததால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் பழைய கட்டடத்தில் உயிர் பயத்துடன் பணியாளர்கள், நோயாளிகள் வந்து செல்லும் நிலை தொடர்கிறது.