/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 10 சதவீதம் நிதி அதிகரித்து வழங்குவதற்கு எதிர்ப்பு
/
சிவகாசி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 10 சதவீதம் நிதி அதிகரித்து வழங்குவதற்கு எதிர்ப்பு
சிவகாசி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 10 சதவீதம் நிதி அதிகரித்து வழங்குவதற்கு எதிர்ப்பு
சிவகாசி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 10 சதவீதம் நிதி அதிகரித்து வழங்குவதற்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 17, 2025 12:20 AM

சிவகாசி: சிவகாசியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 சதவீதம் நிதி அதிகரித்து வழங்குவதற்கு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை ரத்து செய்ய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
சேதுராமன், (தி.மு.க.,): திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 சதவீதம் பணம் அதிகரித்து வழங்க தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் துாய்மைப் பணிகளை சரியாக மேற்கொள்ளாத நிலையில் பணம் அதிகரித்து வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து நின்று தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
மகேஸ்வரி, (தி.மு.க.,): காரனேசன் விலக்கில் பட்டாசு தொழிலாளர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கமிஷனர்: அப்பகுதியில் ரோடு அகலப்படுத்தப்பட்டு எளிதான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.
சுதாகர், (தி.மு.க.,): திருத்தங்கல் பாண்டியன் நகரில் இருந்து சத்யா நகர் வழியாக சிவகாசி வேலாயுத ரஸ்தா வரை ரோட்டை சீரமைத்து போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும்.
சாமுவேல், (சுயே.,): திருத்தங்கல் செங்குளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக சுகாதார வளாகம் இடிக்கப்பட்டது. மாற்று இடத்தில் சுகாதார வளாகம் கட்டித் தரப்படும் என உறுதியளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
வெயில் ராஜ், (தி.மு.க.,): அண்ணா காலடியில் வீடுகளுக்கு முழுமையாக குழாய் இணைப்பு கொடுக்கவில்லை. வாறுகால் வசதியும் இல்லை.
சாந்தி (தி.மு.க.,): 14வது வார்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்து விட்டது. ஒரு ஆண்டாக கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜெயராணி, (தி.மு.க.,): 47வது வார்டில் வருகின்ற குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.
சந்தனமாரி,(தி.மு.க.,): சத்யா நகரில் சுகாதார வளாகம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.