/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு
/
கோயில் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு
ADDED : செப் 27, 2024 04:35 AM

காரியாபட்டி: மல்லாங்கிணர் நந்திக்குண்டு கிராமத்தில் கோயில் அருகே ரேஷன் கடை கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
காரியாபட்டி நந்திக்குண்டு கிராமத்தினர் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ., தூரம் உள்ள புளியம்பட்டிக்கு சென்று வருகின்றனர். வயதானவர்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்கி வருவதில் பெரிதும் சிரமம் உள்ளது.
இதனைப் பிரித்து உள்ளூரில் ரேஷன் கடை ஏற்படுத்த வேண்டும் என அக்கிராமத்தினர் வலியுறுத்தினர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து அங்கு ரேஷன் கடை கட்ட ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்குள்ள கருப்பசாமி கோயில் அருகில் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அக்கிராம பெண்கள் கோயில் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை கண்டு கொள்ளாமல் அதே பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
இதனால் ஆத்திரமடைந்த நுாற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு மல்லாங்கிணர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.