/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை அள்ள சொந்த செலவு; குடிநீருக்கு வழி இல்லை
/
குப்பை அள்ள சொந்த செலவு; குடிநீருக்கு வழி இல்லை
ADDED : செப் 02, 2025 11:41 PM
ராஜபாளையம்; மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி அயோத்தி ராம் நகரில் குப்பை அகற்றுவதற்கு சொந்த செலவு, குடிநீர் விலைக்கு வாங்கும் அவலம், குடிமகன்கள் தொல்லை என பல்வேறு சிக்கல்களால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலப் பட்ட கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அயோத்தி ராம் நகர் குடியிருப்பு நிர்வாகிகள் சந்திரன் ராஜா, அழகேந்திரன், திருப்பதி ராஜா, ரமேஷ், ஜெகநாதன், கணேஷ் ராஜா, சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது: குடியிருப்பு உருவாகி 20 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கி வருகிறோம்.
7 தெருக்கள் குறுக்கு தெருக்கள் அமைந்த பகுதியில் தார் ரோடு பணிகள் என கல்வெட்டு வைத்து 6வது தெருவில் 1வது 2வது குறுக்கு தெரு, 7 வந்து, 4வது ெதருக்கள் போடாமல் வைத்துள்ளனர். தார் ரோடு அமைத்த வேகத்தில் அருகில் உருவாகிய புதிய பிளாட்டுகளுக்கு மண் அடிக்கிறோம் என கனரக லாரிகள் சென்று சிதைந்து போனதை கேட்க வழியில்லை.
வாறுகால் வசதி இல்லாததால் அருகில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீர் விடப்படுகிறது. நகராட்சி கழிவு நீரும் இப்பகுதி குடியிருப்பு வழியே திருப்பி விடப்பட்டு விவசாய பகுதிக்கு பாய்வதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனால் துர்நாற்றத்துடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. குடியிருப்புகளுக்கு என ஒதுக்கப்பட்ட 19 மின்விளக்குகளில் 4 வேறு பகுதிக்கு அமைத்த வேகத்தில் கழட்டி சென்று விட்டனர்.
நகராட்சி ஒட்டியுள்ள இப்பகுதியில் 20 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை குடிநீருக்கு வழியின்றி விலைக்கு வாங்கும் அவலம் உள்ளது. மேல்நிலை தொட்டி அமைக்க இடம் ஒதுக்கி செட்டிகுளம் பகுதியில் சப்ளையாகும் தண்ணீரை இணைத்து விடுகிறோம் என கூறியது தேர்தல் வாக்குறுதியாகவே உள்ளது.
குடியிருப்பில் ஒட்டி அமைந்துள்ள பிளாட் பகுதி திறந்தவெளி பாராகவும், கஞ்சாவுக்கு அடிமையானவர்களின் புகலிடமாகவும் மாறுவதால் தொல்லை தாங்க முடியவில்லை. புகார் அளித்தும் போலீசார் மிரட்டலுடன் விட்டு விடுவதால் பிரச்சனை தொடர்கிறது.
சேகரமாகும் குப்பையை நமக்கு நாமே திட்டம் போல மாதத்திற்கு இரண்டு நாள் குடியிருப்பு வாசிகள் சொந்த செலவில் டிராக்டர் அமர்த்தி வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம், பி.டி.ஓ., முதல்வர், பிரதமர், ஜனாதிபதி என மனுக்களை அனுப்பிக்கொண்டு அடிப்படை வசதிக்காக ஏங்கி வருகிறோம்., என்றனர்.