/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வயல்களிலேயே முளைக்கும் நெல் மணிகள்
/
வயல்களிலேயே முளைக்கும் நெல் மணிகள்
ADDED : ஜன 11, 2024 05:05 AM

காரியாபட்டி : காரியாபட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தொடர் மழைக்கு நீரில் மூழ்கியதால் அறுவடை செய்ய முடியவில்லை. வயல்களிலே முளைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி பகுதியில் எஸ். கடம்பன்குளம், எஸ். மறைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் நெல் பயிரிட்டனர். நல்ல மழை பெய்ததால், நன்கு பயிர்கள் வளர்ந்தன. சமீபத்தில் பெய்த கனமழைக்கு பெரும்பாலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.
சில விவசாயிகள் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடித்து நெற்பயிர்களை ஓரளவிற்கு காப்பாற்றினர். இந்நிலையில் அறுவடை செய்யும் பருவத்திற்கு வந்த நிலையில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதற்கு தாக்குப் பிடிக்க முடியாத நெற்பயிர்கள் சாய்ந்தன. வயல்களில் மழை நீர் தேங்கியதால் நீரில் மூழ்கின. இதில் விளைந்த நெல் மணிகள் முளைக்க துவங்கின. ஏராளமாக செலவு செய்து அறுவடை செய்யும் சமயத்தில் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மணிகண்டன், விவசாயி, எஸ். கடமன்குளம்: இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் நெல் பயிரிட்டேன். தண்ணீர் பஞ்சம் இன்றி நெல் விளைந்து அறுவடைக்கு தயாராகின. தொடர் மழை காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி நெல் மணிகள் முளைக்க துவங்கின.
கடன் வாங்கி செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் எப்படி கடனை அடைக்க முடியும் என கவலையாக உள்ளது. அரசு கூடுதலாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.