/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஞ்சாலைகளும் தொடர்ந்து தொய்வின்றி இயங்குவதற்கு நடவடிக்கை தேவை
/
பஞ்சாலைகளும் தொடர்ந்து தொய்வின்றி இயங்குவதற்கு நடவடிக்கை தேவை
பஞ்சாலைகளும் தொடர்ந்து தொய்வின்றி இயங்குவதற்கு நடவடிக்கை தேவை
பஞ்சாலைகளும் தொடர்ந்து தொய்வின்றி இயங்குவதற்கு நடவடிக்கை தேவை
ADDED : ஆக 25, 2024 04:11 AM
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பட்டாசு மற்றும் பஞ்சாலைத் தொழிலில் தான் அதிக வேலைவாய்ப்பை மக்கள் பெற்று வருகின்றனர்.
இதனால் ஏராளமான நகர்ப்புற மக்கள் மட்டுமின்றி, கிராமப்புற மக்களும் வெளிமாநில தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இதன்படி மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, ராஜபாளையம் அருப்புக்கோட்டை சுந்தரபாண்டியம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பஞ்சாலைகள் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து பஞ்சுகளை வாங்கி நூல்களாக உற்பத்தி செய்து இலங்கை, சீனா, ஜப்பான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
இந்நிலையில் பொருளா தார மந்த நிலையாலும், பல்வேறு நாடுகளுக்கான போர் நடைபெறுவதாலும் ஏற்றுமதி மிகவும் குறைந்து உள்ளது. இதனால் அதிகளவில் உற்பத்தி செய்த நூல்கள் தேக்க நிலை ஏற்பட்டு, உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதால் லாபகரமாக தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நூற்பாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பல ஆலைகள் விடுமுறை விடப்பட்டு தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக தினசரி வேலை கிடைக்காமல் உள்ளனர்.
ஒரு சில பஞ்சாலைகள் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் தங்களுக்கு சொந்தமான நிலங்களை விற்றுள்ளனர்.
பஞ்சு விலையும், நூல் விலையும் சமச்சீரற்ற நிலை இருப்பதாலும், ஏற்றுமதி இறக்குமதி முறையின்றி நடப்பதாலும், வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு, மின் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களாலும் மாவட்டத்தில் தொடர்ந்து பஞ்சாலைகள் இயங்க முடியாத சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இதனால் நேரடியாக பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலில், மறைமுகமாக ஏராளமான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு கிடைக்காத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து பஞ்சாலைகளும் தொடர்ந்து தொய்வின்றி இயங்குவதற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும், மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும்.
இதற்கு மாவட்ட எம்.எல்.ஏ. க்கள், எம்.பி க்கள் அமைச்சர்கள் குரல் கொடுக்க வேண்டுமென பஞ்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

