/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தலைவர்களின் பதவி முடிந்ததால் ஊராட்சி பணிகள் தொய்வு
/
தலைவர்களின் பதவி முடிந்ததால் ஊராட்சி பணிகள் தொய்வு
தலைவர்களின் பதவி முடிந்ததால் ஊராட்சி பணிகள் தொய்வு
தலைவர்களின் பதவி முடிந்ததால் ஊராட்சி பணிகள் தொய்வு
ADDED : மார் 19, 2025 06:52 AM

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் உறுப்பினர்களுக்கான தேர்தல் 2019 டிசம்பர் மாதம் நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று பொறுப்பில் இருந்தனர். இந்நிலையில் இவர்களின் பதவிக்காலம் முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையில், ஊராட்சி ஒன்றியங்களில் பணிகள் தடை படாமல் இருக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
அந்தந்த ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்கள் மேற்கொண்ட பணிகளை ஊராட்சி செயலர்கள் செய்து வருகின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் பதவியில் இருந்த போது, தங்கள் ஊராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள், குடிநீர் பிரச்னைகள் உள்ளிட்ட குறைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்று பேசி தேவையான நிதியை பெற்று பணி செய்து வந்தனர். கிடைக்கின்ற நிதியை வைத்து சமாளித்து வந்தனர்.
இவர்கள் பதவி காலம் முடிந்து சென்று விட்டதால், ஊராட்சி செயலர்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை பிரச்னைகள், அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்ப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
செயலர்கள் குறைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சொல்லி அதன் பின் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெற்று செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
பல ஊராட்சிகளில் தண்ணீர் பிரச்னை கடுமையாக உள்ளது. குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர்.
கோடை காலம் துவங்கிய நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு கூடுதலாக போர்வெல் அமைத்து தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை.
இதே போன்று பல ஊராட்சிகளில் சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடைகள், கழிப்பறைகள், குளியல் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே செய்யப்பட்டு வருகின்ற வளர்ச்சி பணிகளை மட்டும் அதிகாரிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
ஊராட்சியில் மக்கள் குறைகளை கூறுவதற்கு சென்றாலும் அங்கு செயலர்கள் இருப்பது இல்லை. ஒன்றிய அலுவலக கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் என சென்று விடுகின்றனர்.
கிராமங்களில் குடிநீர் மோட்டார் பழுது, தெரு விளக்கு பழுது என அடிப்படை வசதிகளை கூட சரி செய்யாத நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் ஊராட்சி மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். செய்ய வேண்டிய பணிகளை விரைவாக செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.