/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரளச்சி கண்மாய் ஓடை முழுவதும் கட்ட வேண்டும்
/
பரளச்சி கண்மாய் ஓடை முழுவதும் கட்ட வேண்டும்
ADDED : அக் 27, 2024 06:15 AM

திருச்சுழி : திருச்சுழி அருகே பரளச்சி கண்மாய்க்கு கஞ்சம்பட்டி வழியாக வரும் நீர் வரத்து ஓடை அடிக்கடி உடைந்து போவதால், தற்போது ஒரு பகுதி மட்டும் கட்டப்பட்டு வருவதால் மீண்டும் உடைந்து விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
திருச்சுழி அருகே பரளச்சியில் பெரிய கண்மாய் உள்ளது. இது மேலையூர், புல்லா நாயக்கன்பட்டி, பரளச்சி ஆகிய 3 கிராமங்களுக்கும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. கண்மாய்க்கு நீர்வரத்து ஓடை கஞ்சம்பட்டி வழியாக வருகிறது. ஓடை குறிப்பிட்ட பகுதியில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி விடுகிறது.
சென்ற ஆண்டில் இதே போன்று கன மழை பெய்ததில் ஓடை உடைந்து ஒட்டுமொத்த தண்ணீரும் வெளியேறி ஆயிரக்கணக்கான நிலங்களில் பயிர்கள் பாழாகி விட்டன. ஓடை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. ஓடைக்கு தள்ளி தடுப்பூச்சுவர் கட்டுகின்றனர். ஆனால் ஓடை தடுப்பு சுவர் முழுமையாக கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, கண்மாய் நீர் மேலாண்மை பாசன தலைவர் செல்வகுமார், இந்திய கம்யூ., திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறியதாவது : கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடை உடைந்த பகுதியில் கட்டும் பணி நடந்து வருகிறது. உடைந்த பகுதி முழுவதும் கட்டாமல் ஒரு பகுதி மட்டும் கான்கிரிட் தடுப்பு சுவராக கட்டப்பட்டு வருகிறது. முழுமையாக கட்டாமல் விட்டால், கன மழை பெய்கின்ற போது மீண்டும் உடையும் அபாயம் உள்ளது., என்றனர்.
வைகை, காவிரி, குண்டாறு பாசன விவசாய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: கண்மாய்க்கு தண்ணீர் வரும் தெற்கு கரை பகுதி ஓடை தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விவசாய நிலங்களுக்கு சென்று விடுகிறது. கடந்த ஆண்டு கன மழையில் ஓடை உடைந்து 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய பயிர்கள் மூழ்கின. இந்த பகுதி கண்மாய்கள் முழுமையாக நிறைவது இல்லை. தற்போது அமைக்கப்பட்டு வரும் சுவர் இயற்கைக்கு முரணாக கால்வாய் மையப்பகுதியில் அமைக்கின்றனர். இதனால் தண்ணீர் வரும் பகுதி தடைபட்டு மேலும் கூடுதலாக உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தடுப்புசுவரை தாங்கும் துாண் உரிய அகலத்தில் இல்லை. கால்வாய் 500 மீட்டருக்கு தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை வைத்த நிலையில், வெறும் 30 மீட்டருக்கு மட்டும் பணி நடக்கிறது. முழுமையான தடுப்புச் சுவர் கட்ட அரசு கூடுதலான நிதி ஒதுக்கி தர வேண்டும்.