/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பரிதாபகரமான உறிஞ்சிக்குழிகள்; முடங்கிய சுத்திகரிப்பு பணிகள்
/
பரிதாபகரமான உறிஞ்சிக்குழிகள்; முடங்கிய சுத்திகரிப்பு பணிகள்
பரிதாபகரமான உறிஞ்சிக்குழிகள்; முடங்கிய சுத்திகரிப்பு பணிகள்
பரிதாபகரமான உறிஞ்சிக்குழிகள்; முடங்கிய சுத்திகரிப்பு பணிகள்
ADDED : ஆக 07, 2025 11:13 PM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக வெளியேற்ற கிடைமட்ட உறிஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டது.
இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் சரியாக பராமரிக்காததால் அவை தற்போது முடங்கி புதர்மண்டி கிடக்கின்றன.
2021-22ம் நிதியாண்டில் தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் அனைத்து கிராமங்களையும் சுகாதாரத்தில் முன் மாதிரியாக மாற்ற அறிவுறுத்தியது. இதன் காரணமாக 15வது நிதிக்குழுமத்தில் 30 சதவீத நிதி சுகாதாரத்திற்காகவே ஒதுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊராட்சிகளில் வெளியேறும் வாறுகால் கழிவுநீரை கிடைமட்ட உறிஞ்சிக்குழி அமைத்து நன்னீராக்க திட்டமிடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு கோவிந்தநல்லுார், விருதுநகர் வடமலைக்குறிச்சி உள்ளிட்ட 7 ஊராட்சிகளில் கிடைமட்ட உறிஞ்சிக்குழிகள் அமைக்கப்பட்டன.
பார்ப்பதற்கு கால்நடை குடிநீர் தொட்டிகளை போன்று இருக்கும் இவை, ஊரின் எல்லையிலோ அல்லது தெருவின் கடை பகுதியிலோ அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த கிடைமட்ட உறிஞ்சிக்குழியில் முதல் அடுக்கில் ஜல்லி கற்கள், 2வது அடுக்கில் கிராவல், மூன்றாவது அடுக்கில் கரி, 4வது அடுக்கில் மணல், மீண்டும் அடுக்கில் அமைத்து போல் ஜல்லி அமைக்க வேண்டும்.
இந்த சுத்திகரிப்பு முறையால் முதல் அடுக்கில் நுழையும் கழிவுநீர் மண் துகள்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. 2வது அடுக்கான கிராவலில் இருந்து வெளியேறும் போது கருமை நிறம் குறைகிறது. 3வது அடுக்கான கரியில் இருந்து சுத்திகரிக்கப்படுவதால் நீர் துாய்மை அடைகிறது.
இறுதியாக வெளியேறும் போது தெளிந்த நீராகும். இத்திட்டம் தற்போது செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.
அமைத்த நாள் முதல் இதை பராமரிக்க வேண்டியது அவசியம். ஆனால் உள்ளாட்சிகள் கண்டுக் கொள்ளவே இல்லை.
வாறுகால், கிடைமட்ட உறிஞ்சிக்குழியோடு இணையுமிடத்தை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அதையும் செய்யவில்லை. இதனால் அமைக்கப்பட்ட 7 உறிஞ்சிக்குழிகளுமே செயல்படாமல் புதர்மண்டி கிடக்கின்றன. சில்ட் கழிவுகளும் அள்ளுவதே இல்லை. இதனால் இவை தோல்வி அடைந்து விட்டன.
இத்திட்டம் மண்வளம், நீர்வளத்தை பாதுகாக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி, சிதிலமாகி வருகிறது.