/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் வசதி வேண்டும் நோயாளிகள் எதிர்பார்ப்பு
/
தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் வசதி வேண்டும் நோயாளிகள் எதிர்பார்ப்பு
தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் வசதி வேண்டும் நோயாளிகள் எதிர்பார்ப்பு
தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் வசதி வேண்டும் நோயாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:22 AM
விருதுநகர் : சி.டி., ஸ்கேன் பரிசோதனை எடுப்பதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துக்கல்லுாரி, மருத்துவமனைகளை நாடும் நிலை உள்ளது. இந்நிலையை போக்க தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் சி.டி., ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன் பரிசோதனை எடுக்க ரூ. 500, கதிரியக்க மருந்து நரம்பு வழியாக செலுத்தி எடுக்க கூடுதலாக ரூ. 300 வசூலிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாகவும் எடுக்கப்படுகிறது.
இந்த கட்டணங்கள் வசூலிக்கவும், காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து சி.டி., ஸ்கேன் பரிசோதனை எடுப்பதற்காக மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் இருந்து டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள், டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தாலுகா அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே எடுக்கும் வசதி மட்டுமே உள்ளது. சி.டி., ஸ்கேன் பரிசோதனை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இங்கு மகப்பேறு பரிசோதனைகள், எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது.
மேலும் சி.டி., ஸ்கேன் பரிசோதனை தேவைப்படும் நோயாளிகளை இங்கிருந்து அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதனால் பரிசோதனை, சிகிச்சைக்காக நோயாளிகள் தினசரி நீண்ட துாரம் அலையும் நிலையே உள்ளது. கட்டணம் செலுத்தி எடுக்க முடியாதவர்கள், காப்பீட்டு திட்டத்தில் ஒரு நாள் பதிவு செய்து மறுநாள் மீண்டும் பரிசோதனை எடுப்பதற்காக மருத்துவமனைக்கு செல்லும் நிலையே நீடிக்கிறது.
எனவே நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப சி.டி., ஸ்கேன் வசதி தேவைப்படும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் அதற்கான வசதியை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.