/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் குடிநீர் சப்ளை கிடைக்காமல் மக்கள் ...தவிப்பு
/
மாவட்டத்தில் குடிநீர் சப்ளை கிடைக்காமல் மக்கள் ...தவிப்பு
மாவட்டத்தில் குடிநீர் சப்ளை கிடைக்காமல் மக்கள் ...தவிப்பு
மாவட்டத்தில் குடிநீர் சப்ளை கிடைக்காமல் மக்கள் ...தவிப்பு
ADDED : ஆக 16, 2025 11:54 PM

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 ஊராட்சிகள் உள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் பல ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு கொடுக்கப்பட்டு, உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் தினமும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து கிணறுகள், போர்வெல்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
ஆனால், ஆண்டு தோறும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தினசரி வினியோகத்தில் கால இடைவெளி ஏற்பட்டு 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை நடந்தது. ஆனாலும் அதிகரித்த மக்கள் தொகையாலும், குடியிருப்புகளாலும் மாவட்டத்திலிருந்து கிடைத்த குடிநீர் போதுமானதாக இல்லாமல் தாமிரபரணியில் இருந்து மானுார், வல்லநாடு, முக்கூடல் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக மாவட்டத்தில் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், 100 கி.மீட்டர் தூரம் பயணித்து வர வேண்டியதிருப்பதால் அடிக்கடி குழாய் உடைப்பு, மின்தடை, கருவிகள் பழுது ஆகியவற்றின் காரணமாக சீரான நாட்களில் மாவட்டத்தின் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை இத்திட்டத்தின் துவக்க காலம் முதல் நீடித்து வருகிறது.
இதில் நகராட்சி பகுதிகளில் தற்போது 7 நாட்களுக்கு ஒரு முறை தாமிரபரணி நீர் சப்ளை செய்யப்படுகிறது, சாத்தூர் நகராட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறையும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளையான நிலையில் தற்போது 10 நாட்களை கடந்தும் பல பகுதிகளில் குடிநீர் சப்ளையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.பேரூராட்சி பகுதிகளில் உள்ளூர் நீருடன், தாமிரபரணி குடிநீர் கலந்து வாரம் ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், இது மக்கள் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும் ஊராட்சிகளிலும் ஒரு குடம் மினரல் வாட்டர் ரூ. 12 கொடுத்து மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.
இதனை தவிர்க்க புதிய தாமிரபரணி குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவது காலத்தின் அவசியமாகும். இதற்காக தற்போதே மக்கள் பிரிதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.