ADDED : டிச 29, 2024 04:07 AM

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சடையம்பட்டி ஊராட்சியில் முனியசாமி கோயில் குறுக்கு தெருவில் ரோடு வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சடையம்பட்டி ஊராட்சியில் முனியசாமி கோயில் தெருவில் குறுக்குத் தெருக்களில் ரோடு வசதி இல்லை. மெயின் ரோடு தார் ரோடாக போடப்பட்டு உள்ள நிலையில் குறுக்குத் தெருவில் புதியதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.
புதிய வீடு கட்டுவதற்காக லாரியில் சிமென்ட் செங்கல் கம்பி போன்றவை கொண்டு வரப்படுகின்றன. குறுக்குத் தெரு முழுவதும் மண் ரோடாக உள்ளதால் சமீபத்தில் பெய்த மழையில் இந்த ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிட்டது.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சேற்றில் கால் வைத்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. டூவீலரில் செல்வோர் சகதி காரணமாக வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் ரோடு போட வலியுறுத்தி மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி இந்த பகுதியில் தார் சாலை அல்லது பேவர் பிளாக் கல் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.