/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி நிறைவடைய மக்கள் எதிர்ப்பார்ப்பு
/
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி நிறைவடைய மக்கள் எதிர்ப்பார்ப்பு
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி நிறைவடைய மக்கள் எதிர்ப்பார்ப்பு
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி நிறைவடைய மக்கள் எதிர்ப்பார்ப்பு
ADDED : நவ 11, 2024 03:56 AM
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரங்களான திருமங்கலம், கல்லுப்பட்டி, அழகாபுரி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக செல்கிறது.
இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருவதால் திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை வரை போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்த வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஆய்வு செய்து திட்ட அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதில் முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஓராண்டிற்கும் மேலாக இரவு, பகலாக நடந்து வருகிறது.
இதில் விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரியில் இருந்து நத்தம் பட்டி, கிருஷ்ணன் கோவில், வலையபட்டி, பாட்டக்குளம், மீனாட்சிபுரம், அச்சங்குளம், கடம்பன்குளம், தைலாபுரம், அத்திகுளம் செங்குளம், அயன் நாச்சியார் கோயில், பிள்ளையார்குளம், எஸ். ராமலிங்கபுரம், வழியாக முதுகுடி வரை புதிய ரோடு, மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து தற்போது நிறைவு பெறும் நிலைக்கு வந்துள்ளது.
2023 நவ., டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக மேம்பாலங்கள் கட்டும் பணி தாமதம் ஏற்பட்டாலும் தற்போது அழகாபுரி, நத்தம்பட்டியில் மட்டும் மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையின் இருபுறத்திலும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டில் மாடுகள் குறுக்கே செல்லாமல் தடுப்பதற்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகிலும், ராஜபாளையம் தாலுகாவில் எஸ்.ராமலிங்கபுரத்திற்கும் முதுகுடிக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரயில்வே துறையின் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் தீவிரமான தொடர் முயற்சியால் 8 மாத போராட்டத்திற்கு பிறகு தற்போது ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த இரு இடங்களிலும் அமைக்கப்படவுள்ள இரும்பு பாலங்கள், தற்போது ரயில்வே துறை நிபந்தனைகளின் படி ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இப்பாலங்கள் பொருத்தப்பட்டு, விரைவில்
நான்கு வழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திட்ட இயக்குனர் வேல்ராஜ் கூறுகையில், ராஜபாளையம் -திருமங்கலம் நான்கு வழி சாலை பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே மேம்பாலங்கள் பணிகளும் துவக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் முடிவடையும். வழித்தடத்தில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் முடிவடையும் நிலையை நோக்கி பயணிக்கிறது. மற்ற இடங்களில் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கிறோம் என்றார்.