/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசுகளுக்கு 10 - 90 சதவீதம் தள்ளுபடி விளம்பரங்களால் குழப்பத்தில் மக்கள்
/
பட்டாசுகளுக்கு 10 - 90 சதவீதம் தள்ளுபடி விளம்பரங்களால் குழப்பத்தில் மக்கள்
பட்டாசுகளுக்கு 10 - 90 சதவீதம் தள்ளுபடி விளம்பரங்களால் குழப்பத்தில் மக்கள்
பட்டாசுகளுக்கு 10 - 90 சதவீதம் தள்ளுபடி விளம்பரங்களால் குழப்பத்தில் மக்கள்
ADDED : செப் 27, 2024 03:00 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் விற்கப்படும் பட்டாசுக்கு 10 முதல் 90 சதவீதம் தள்ளுபடி என வைக்கப்பட்ட விளம்பரங்களால் குழப்பம் நிலவுகிறது. பட்டாசு வாங்க வருகிறவர்கள் உண்மையான விலை தெரியாமல் ஏமாற்றமடைகின்றனர்.
தீபாவளிக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. விருதுநகர் - சிவகாசி ரோடு, விருதுநகர்- சாத்துார் ரோடு, சிவகாசி - சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், வெம்பக்கோட்டை ரோடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
வெளிமாநில, மாவட்ட மொத்த வியாபாரிகள் நேரடியாக ஆலைகளில் சென்று பட்டாசு வாங்கி விடுவர். சிறு வியாபாரிகளும் மக்களும் பட்டாசு வாங்க விருதுநகர் மாவட்டம் வருகின்றனர்.
இங்குள்ள கடைகளில் பட்டாசு வாங்க வரும் மக்களை கவரும் விதம் பட்டாசுக்கு குறைந்தது 10 முதல் அதிக பட்சம் 90 சதவீதம் தள்ளுபடி என விளம்பரங்களை வைத்துள்ளனர். அதிலும் ஒரு சில கடைகளில் 72, 63, 81, 90 என ராசி எண்ணிற்கு ஏற்பவும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டாசு வாங்க வரும் சிறு வியாபாரிகள், மக்கள் பட்டாசின் உண்மையான விலை தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
சிவகாசியில் உள்ள ஒரு சில புரோக்கர்கள் இங்கு வரும் வெளியூர்க்காரர்களை அடையாளம் கண்டு அதிக தள்ளுபடியில் பட்டாசு வாங்கி தருகிறோம் எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். எனவே உண்மையான விலை குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சரியான விவரங்களை தந்து வரைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டாசு வியாபாரி ஒருவர் கூறியதாவது: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் பெரிய நிறுவனங்களில் சரியான விலையை அச்சடித்து குறிப்பிட்ட சதவீதத்தை தள்ளுபடி செய்வர். அதுவும் விற்பனையை பொறுத்து தள்ளுபடி கொடுப்பர். ஆனால் சிறிய நிறுவனங்களில் எம்.ஆர்.பி., எனப்படும் உச்சபட்ச விலையை அதிகமாக வைத்து, அதற்கு அதிகமான தள்ளுபடியை அறிவிக்கின்றனர்.
குறைந்த சதவீத தள்ளுபடி பட்டாசு, அதிக சதவீத தள்ளுபடி பட்டாசு இரண்டையும் வாங்கி ஒப்பிட்டு பார்க்கையில் பெரிய அளவில் விலையில் வித்தியாசம் இருக்காது. இது தெரியாமல் ஒரு சிலர் அதிக தள்ளுபடி விளம்பரத்தை நம்பி பட்டாசு வாங்கி செல்கின்றனர்.
இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் தான் தீர்வு காண வேண்டும். பட்டாசு தரத்திற்கு தகுந்தது போல விலை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.