/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
/
சிரமத்தில் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள்
ADDED : டிச 15, 2024 06:05 AM
காரியாபட்டி: வாறுகால் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் பல நாட்களாக பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதால் மழை நீர் நிரம்பி ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டபொம்மன் தெருவில் சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து அச்சம், வரத்து கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை உடைப்பு உள்பட பிரச்னைகளால் மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தின் கீழ் தண்ணீர் வரும் வரத்து கால்வாயின் குறுக்கே சமீபத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. அதிக அளவில் தண்ணீர் வந்ததையடுத்து தாக்கு பிடிக்க முடியாமல் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. கட்டபொம்மன் தெருவில் ஏராளமான சேதம் அடைந்த மின் கம்பங்கள் உள்ளன.
மழை நேரம் என்பதால் மின் கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. பலத்த காற்றுக்கு ஒடிந்து விழும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். விருதுநகர் கல்குறிச்சி ரோட்டில் தனியார் பள்ளி எதிரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது. மழை நேரங்களில் மழை நீர் தேங்கி சிறுவர்கள் சறுக்கி விழும் ஆபத்து உள்ளது. விபத்திற்கு முன் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.