/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதார வளாகம், ரேஷன் கடை இல்லை சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் புதுார் மக்கள்
/
சுகாதார வளாகம், ரேஷன் கடை இல்லை சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் புதுார் மக்கள்
சுகாதார வளாகம், ரேஷன் கடை இல்லை சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் புதுார் மக்கள்
சுகாதார வளாகம், ரேஷன் கடை இல்லை சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் புதுார் மக்கள்
ADDED : டிச 17, 2025 06:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் புதுாரில் ரோடு வசதி, பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம், ரேஷன் கடை, போதிய அளவிற்கு பஸ் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சிரமத்துடன் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் போத்திராஜ், தங்கப்பாண்டி, வேலாயுதம், செந்தூர்பாண்டி, விஜயேந்திரன், ராஜு கூறியதாவது;
எங்கள் கிராமத்தில் 140க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எங்களது அன்றாடம் பல்வேறு காரணங்களால் தினமும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் சென்று வருகிறோம். ஆனால், ராஜபாளையத்திற்கு தினமும் 3 நேரமும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 4 நேரமும் மட்டுமே பஸ்கள் இயங்குகிறது. இதனால் அவசர மருத்துவ வசதிக்காக செல்ல போதிய பஸ்கள் இல்லை. குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எங்கள் கிராமத்தின் வழியாக ராஜபாளையம் சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக சுகாதார வளாக வசதி இல்லாததால் இன்றும் திறந்தவெளியை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது.
மெயின் ரோட்டில் இருந்து குழந்தைகள் நல மையம் வரையிலும் உள்ள ரோடு சேதமடைந்து மழைக்காலங்களில் சகதி ஏற்படுவதால் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுகின்றனர். எனவே, மெயின் தெருவிலும், குறுக்கு தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்க வேண்டும்.
பஸ் ஸ்டாப்பில் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லாமல் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, உடனடியாக பயணியர் நிழற்குடை கட்டித் தர வேண்டும்.
இங்கு வசிக்கும் மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க செந்நெல்குளத்திற்கும், பெருமாள் தேவன்பட்டிக்கும் செல்ல வேண்டி உள்ளது. எனவே, தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி மட்டுமே உள்ளதால் போதிய அளவிற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தாமிரபரணி தண்ணீர் வாரம் ஒரு முறை தான் கிடைக்கிறது. இது போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்.
தற்போது அனைத்து தெருக்களிலும் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு, நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையாவது தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்.
இங்குள்ள குழந்தைகள் நல மையம் கட்டடம் சேதமடைந்து பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடி கிடக்கிறது. இதனை இடித்து விட்டு புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி தர வேண்டும்.
மேலும் மயானத்திற்கு செல்ல ரோடு வசதியோ, மயானத்தில் தண்ணீர், மின்விளக்கு போன்ற வசதிகளோ இல்லை. இதனால் இரவு நேரங்களில் சிரமத்தை சந்திக்கிறோம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் புகார் மனுக்கள் அனுப்பி உள்ளோம்.
எனவே, இனி மேலும் காலதாமதம் இல்லாமல் எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம் என்றனர்.

