UPDATED : ஜூன் 18, 2026 08:09 PM
ADDED : ஜூன் 18, 2026 08:01 PM
சாத்துார்:சாத்துார் நகரில் செயல்படாத டிராபிக் சிக்னல்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் மெயின் ரோட்டில் நாளுக்கு நாள் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருக்கன்குடி ,கோட்டூர் குருசாமி கோயில் ஆகிய ஆன்மிக தலங்கள் சாத்துார் அருகே அமைந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் சாத்துார் வந்து இத்தலங்களுக்கு செல்கின்றனர்.
மேலும் நகரில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக முக்கிய சந்திப்புகளில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
இந்த டிராபிக் சிக்னல்கள் மதுரை பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள போலீஸ் கூண்டு மூலமும், பஸ் ஸ்டாண்ட் எதிரில் அமைக்கப்பட்ட கண்ட்ரோல் ரூம் மூலம் இயக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை கண்காணித்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டிராபிக் சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன. சிக்னல் செயல்படாத நிலையில் டிராபிக் போலீசார் ரோட்டில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நிலை உள்ளது.
போலீசார் கண்காணிப்பு இல்லாத நேரங்களில் மதுரை பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட் பகுதி, முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் அதிகரித்து வருகிறது.
எனவே டிராபிக் சிக்னல்களை சீரமைப்பதோடு மீண்டும் சி.சி.டி.வி கண்ட்ரோல் ரூம் மூலம் கண்காணித்து சிக்னல்களை இயக்கி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
