/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசுப் பணியில் போட்டிக்கு வந்த பி.பார்ம், பார்ம்- டி பட்டதாரிகள் விரக்தியில் டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள்
/
அரசுப் பணியில் போட்டிக்கு வந்த பி.பார்ம், பார்ம்- டி பட்டதாரிகள் விரக்தியில் டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள்
அரசுப் பணியில் போட்டிக்கு வந்த பி.பார்ம், பார்ம்- டி பட்டதாரிகள் விரக்தியில் டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள்
அரசுப் பணியில் போட்டிக்கு வந்த பி.பார்ம், பார்ம்- டி பட்டதாரிகள் விரக்தியில் டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள்
ADDED : பிப் 20, 2025 02:18 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் 425 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமின்றி பி. பார்ம், மருத்துவ படிப்பிற்கு இணையானதாக கூறப்படும் பார்ம் -டி படித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பால் டிப்ளமோ பார்மசிஸ்ட்டுகள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் 1985க்கு முன்பு வரை மருந்து கடைகளில் வேலை பார்த்த அனுபவ சான்றிதழின் அடிப்படையில் இளைஞர்கள் மருந்து கடை துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்பு அரசு , தனியார் பார்மசி கல்லூரிகளில் ஓராண்டு டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமே மருந்து கடைகள் துவங்க மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்தது. தற்போது இரு ஆண்டு டிப்ளமோ பார்மசி படித்தவர்கள் மட்டுமே அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்து கடைகளில் பணியாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
30 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பார்மசிஸ்ட்டுகள் நிரப்பப்படவில்லை. ஆண்டுதோறும் டிப்ளமோ பார்மசி படித்து வெளியேறிய பல ஆயிரம் பேர் படிப்பிற்கு சம்பந்தமில்லாமல் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பணியிடம் நிரப்பப்படும் போது தங்களுக்கும் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தற்போது 50 வயதை கடந்த பலர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் 965 பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. அதில் டிப்ளமோ படித்தவர்களுடன், பி.பார்ம் டிகிரி படித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில் பட்டதாரி பார்மசிஸ்ட்கள் 90 சதவீதம் பேர் பணி வாய்ப்பு பெற்றனர். டிப்ளமோ படித்த மருந்தாளுனர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவித்த 425 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்தவர்கள் மட்டுமின்றி பி.பார்ம், பார்ம் டி- (மருத்துவ படிப்பிற்கு இணையான 6 ஆண்டு பட்டப்படிப்பு) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ படித்து பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியையும், விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
பி.பார்ம் பட்டதாரிகளுக்கு மருந்து ஆய்வாளர்கள் பணியிடமும், கிராமப்புற துணை சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்க பார்ம் -டி படித்தவர்களையும் நியமிக்கலாம். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிப்ளமோ படித்த பார்மசிஸ்ட்டுகள் எதிர்பார்க்கின்றனர்.

