/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கும் மினி பஸ்களை இயக்குங்களேன் படிக்கட்டு பயணம் குறைவதோடு மக்களும் பயன் பெறுவர்
/
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கும் மினி பஸ்களை இயக்குங்களேன் படிக்கட்டு பயணம் குறைவதோடு மக்களும் பயன் பெறுவர்
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கும் மினி பஸ்களை இயக்குங்களேன் படிக்கட்டு பயணம் குறைவதோடு மக்களும் பயன் பெறுவர்
பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கும் மினி பஸ்களை இயக்குங்களேன் படிக்கட்டு பயணம் குறைவதோடு மக்களும் பயன் பெறுவர்
ADDED : டிச 30, 2025 06:17 AM
சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் மினி பஸ்கள் நகர் புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதை பஸ் வசதி இல்லாத கிராமங்கள், ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் இயக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டமாகும்.தற்போது நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் வளர்ச்சி பெற்று வருகிறது. நல்ல காற்று அமைதியான வாழ்க்கையை நாடி நகர் பகுதியில் வசிக்கும் பலரும் தற்போது கிராமப் பகுதியில் வீடுகளை கட்டி குடியேறி வருகின்றனர். இதனால் கிராமப் பகுதிகளில் புதிய நகர்கள் உருவாகி வருகிறது.
தற்போது நகர் பகுதியில் ஒட்டியுள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களுக்கு மட்டுமே மினிபஸ்கள் சென்று வருகின்றன. கிராமங்களுக்கு அடிக்கடி அரசு பஸ் வசதி இல்லை. இதனால் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். மேலும் சில கிராமங்களில் அரசு பஸ் ஒரு நாளைக்கு காலையிலோ, மாலையிலோ வருவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு உயிரை பணயம் வைத்து பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வெம்ப கோட்டை தாலுகா உருவான பின்புதாலுகா அலுவலகத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்காக வர விரும்பும் மக்கள் அரசு டவுன் பஸ் நிலையம் ஆட்டோக்களையும் நம்பியே உள்ளனர். ஆட்டோக்களில் சில நேரம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் டவுன் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிப்பிப்பாறை, கீழச்சத்திரம், குகன் பாறை வழியாக துலுக்கன்குறிச்சிக்கும், துலுக்கன்குறிச்சியில் இருந்து வெம்பக்கோட்டைக்கும், தாயில்பட்டியில் இருந்து விஜய கரிசல்குளம் வழியாக வெம்பக்கோட்டைக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
பெத்து ரெட்டி பட்டியில் இருந்து உப்பத்துார், என்.வெங்கடேஸ்வரபுரம்,நல்லி சத்திரம், தோட்டிலோவன்பட்டி,என். சுப்பையா புரம், கரிசல்பட்டி வரையிலும் மினி பஸ் இயக்குவது மூலம் அப்பகுதி மக்கள் நல்லி, உப்பத்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எளிதில் வந்து சிகிச்சை பெற முடியும்.
இதுபோன்று விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் தேவை அறிந்து கூடுதல் வழித்தடங்களை கண்டறிந்து மினி பஸ்களை இயக்கினால் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதும் தடுக்கப்படும். மக்களும் பலன் பெறுவர்.

