க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்பு போலீசார் எதிர்பார்ப்பு
க்யூ.ஆர்., கோடு செயலியில் வார விடுப்பு போலீசார் எதிர்பார்ப்பு
UPDATED : நவ 02, 2026 07:50 PM
ADDED : நவ 02, 2026 07:47 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலீசாருக்கான வார விடுப்பு க்யூ.ஆர்., கோடு செயலியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் போலீசாருக்கு வார விடுப்பு வழங்கும் நடைமுறை ஸ்டேஷன்களில் நோட்டில் பதிவு செய்யப்பட்டு சுழற்சி முறையில் இன்ஸ்பெக்டர் ஒப்புதலுடன் வழங்கப்படுகிறது.
ஆனால் முக்கியஸ்தர்கள் வருகை, திருவிழா பாதுகாப்பு பணிகளின் போது அதிகமாக போலீசார் தேவைப்படுவதால் வார விடுப்பு மாற்றி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதனால் ஒரிரு நாட்கள் கழித்து மாற்றி வார விடுப்பு எடுக்கும் போது சக போலீசாருக்கான வார விடுப்பு நாளாக இருப்பதால் மற்றொரு நாள் வார விடுப்பு எடுக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. ஸ்டேஷனில் யார், யாருக்கு எந்த நாள் விடுப்பு ஆகிய விவரங்கள் தனி நோட்டில் பதிவு செய்து கையாளப்படுகிறது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் கணினிமயமாகிய இன்றைய காலத்தில் கூட போலீசாருக்கான வார விடுப்பு நோட்டு பதிவில் இருப்பதால் விடுப்பு எடுப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
இதனை போக்க விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தினர் வார விடுப்புக்கான க்யூ.ஆர்., கோடு செயலியை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த செயலியை ஸ்டேஷன்களில் மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் வைத்தால் போலீசார் தங்களின் அலைபேசியில் ஸ்கேன் செய்து தங்களின் வார விடுப்பு நாளை பதிவு செய்தல், மாற்றி எடுத்தல், யார், யாருக்கு எந்த நாளில் விடுப்பு வழங்கப்படுகிறது என்ற அனைத்து விவரங்களையும் அலைபேசியில் சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் ஒப்புதல் வழங்கும் இன்ஸ்பெக்டர்களும் க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து யாருக்கு விடுப்பு வேண்டும், தேவையான நாளில் எத்தனை பேர் பணியில் இருப்பார்கள் ஆகிய விவரங்களை கண்காணித்து முடிவுகள் எடுக்க முடியும்.
