8 கிராம் நகை திருட்டு
சாத்துார்: சாமியார் காலனியைச் சேர்ந்தவர் சின்னக் கருப்பன் , அரசு பஸ் டிரைவர். இவர் மனைவி ரகுபதி நியூட்ரிசன்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு ஜன்னலில் சாவியை மறைத்து வைத்துவிட்டு வேலைக்கு சென்றனர். மதியம் 12:00 மணிக்கு ரகுபதி வீட்டிற்கு வந்தார். அப்போது அதே பகுதி கோவிந்தராஜ் மகன் பாலா இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சந்து வழியாக ஓடியுள்ளார். திறந்து கிடந்த வீட்டிற்குள் அவர் சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த கம்மல் ,ஜிமிக்கி, மாட்டல் என 8 கிராம் நகை, அலைபேசி, மற்றும் பவர்பேங்க் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்திவீச்சு பெண் காயம்
சாத்துார்: தென்றல் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் மனைவி மாரிஸ்வரி, 18. அதே ஊரைச் சேர்ந்த சரவணனுடன் 20, அலைபேசியில் பேசி பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணனின் அண்ணன் பவித்ரன், 23. அக்கா முத்து.25. ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு மாரீஸ்வரியின் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த பவித்ரன் கத்தியை மாரிஸ்வரி மீது வீசினார். இதில் அவர் கழுத்தில் காயமேற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சத்தம் போட அவர் கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நின்ற லாரியில் டூ வீலர் மோதி இருவர் காயம்
சிவகாசி: சிவகாசி சாமி நத்தத்தைச் சேர்ந்த சபரீஸ்வரன் 25, தனது நண்பர் ஜோதிராமனுடன் 24, டூவீலரில் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தி இருந்த லாரியின் பின்பக்கம் மோதியதில் இருவரும் காயம் அடைந்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கர்நாடக மதுபாட்டில்களை விற்பனை செய்த மங்காபுரத்தை சேர்ந்த வைரமுத்து 44, என்பவரை டவுன் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போலீசாரை மிரட்டியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் சிறப்பு எஸ்.ஐ.முத்துச்சாமி தலைமையிலான போலீசார் குழுவினர் நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வ.புதுப்பட்டி அம்பேத்கர் தெருவில் ரோந்து சென்றபோது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ரஞ்சித் குமார் 28, என்பவரை கைது செய்தனர்.
பொறியாளர் பலி
மேலுார்: சிவகாசி செல்வபாரதி 27. பி.இ., முடித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் கணினி பொறியாளராக வேலை பார்த்தார். நேற்று முன் தினம் காலை டூ வீலரில் சென்னையிலிருந்து ஊருக்கு புறப்பட்டு மாலை மதுரை மாவட்டம் மேலுார் மலம்பட்டி அருகே சென்றபோது டூவீலரில் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து இறந்தார். எஸ்.ஐ., ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.

