சந்தன மரங்கள் திருட்டு
விருதுநகரை சேர்ந்தவர் கேசவன். விவசாயி. இவருக்கு வத்திராயிருப்பு தாலுகா கொடிக்குளம் மறிச்சி கட்டு பாலம் அருகே உள்ள தோப்பில்இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து திருடி சென்றுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருடியவர் கைது
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 37, ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு தனது டூவீலர் நிறுத்தி சிகிச்சையில் உள்ள உறவினரை பார்க்க சென்ற போது டூவீலரை காணவில்லை. கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் நெய்வேலியை சேர்ந்த கொளஞ்சி 55, திருடியது தெரிந்து தெற்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
டிரைவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்--சிவகாசி ரோட்டில் சாமிநத்தம்பாலத்தில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு லோடு வேனும், செங்கல் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டதில், வேனை ஒட்டி வந்த தேனி மாவட்டம் தாடிசேரியைச் சேர்ந்த டிரைவர் வைரவன் மாரி 20, பலியானார். லாரியில் பயணித்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அழகுராஜ் 37, சுரேஷ்குமார் 26, பரமசிவம் 47 ஆகியோர் காயமடைந்தனர்.
துப்புரவு தொழிலாளி பலி
வெம்பக்கோட்டை அருகே மடத்துப் பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், 46. இவர் அருப்புக்கோட்டைஅருகே பாலையம்பட்டியில் வசித்து நகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். மலையரசன் பகுதியில் கொட்டப் பட்ட குப்பைகளில் இருந்த பாட்டில்களை சேகரிக்கச் சென்ற போது மயங்கி விழுந்து உயிர் இழந்தார்.