டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த 7 பேர் மீது வழக்கு
காரியாபட்டி: காரியாபட்டி கொட்டங்குளத்திலிருந்து தனியார் நிறுவனம் சார்பாக ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு சோலார் மின் பாதை அமைக்கும் பணி செய்து வருகின்றனர். மீனாட்சிபுரத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கம்பெனி மின் டவர் அமைத்து வருகிறது. அந்த ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி, இவரது மனைவி பஞ்சவர்ணம், உறவினர்கள் முத்துச்சாமி, பால்ராஜ், மாரி, ஆண்டி கிழவன், கருப்பையா ஆகியோர் சட்டவிரோதமாக ஒன்று கூடி, தற்கொலை செய்து கொள்வதாக டவர் மீது ஏறி மிரட்டல் விடுத்து, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, வி.ஏ.ஓ., கணபதிராஜா ஆவியூர் போலீசில் புகார் கொடுத்தன் பேரில் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பெண் பலி
விருதுநகர்: நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் 40. இவர் விருதுநகர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:45 மணிக்கு பணி முடித்து சர்வீஸ் ரோட்டை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர்கள் கைது
தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த முகவூர் தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை குறித்து போலீசார் கண்காணிப்பு செய்தனர். சந்தேகப்படும்படி நின்று இருந்த முகவூரை சேர்ந்த கருப்பசாமி 23, மாணிக்கம் 20, இருவரை சோதனை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டூவீலர், 50 கிராம் கஞ்சாவை தளவாய்புரம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

