தீ விபத்து
விருதுநகர்: விருதுநகர், பாண்டியன் நகர் அருகே அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரவீன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தகர செட் அமைத்து டிரம்ஸ், அதற்கான பொருட்களை வைத்துள்ளார். நேற்று மாலை 5:15 மணிக்கு தகர செட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து கருகியது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பலி
விருதுநகர்: தென்காசி, காளாத்திமடம் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மயில்ராஜ் 41. இவர் ஜன. 28 காலை 10:00 மணிக்கு விருதுநகர் - சாத்துார் தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்கும் போது கோவில்பட்டி, மந்திதோப்பைச் சேர்ந்த ராகவ் கிருஷ்ணன் ஒட்டி வந்த கார் மோதியதில் பலியானார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரியில் வேன் மோதி: 16 பேர் காயம்
விருதுநகர்: திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் முருகன் 51. இவர் லாரியில் ஜன. 27 அதிகாலை 12:30 மணிக்கு விருதுநகர் - சாத்துார் ரோட்டில் வந்த போது லாரியில் சத்தம் கேட்டதால் நிறுத்த முயன்றார். அப்போது டூரிஸ்ட் வேன் ஒட்டி வந்த நாமக்கல் சேந்தமங்கலத்தைச் துரைராஜ் 33, லாரியின் பின்னால் மோதினார். இதில் துரைராஜ், வேனில் இருந்து பயணிகள் 15 பேர் காயமடைந்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: சிவகாசி புது தெருவை சேர்ந்தவர் வைரவன் 53. இவருக்கு நாரணாபுரம் சிவன் நகரில் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு மீனம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த திலீப் குமார் 39, அய்யப்ப ராஜ் 33, ஆகியோர் விதிமுறைகளை மீறி மரத்தடியில் வைத்து பட்டாசு தயாரித்தனர். கிழக்கு போலீசார் வைரவனை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர். ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பேக்கரி ஊழியருக்கு அடி
சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் சின்னையா நாயக்கர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் 47. பேக்கரியில் வேலை பார்த்து வரும் இவர் தனது டூவீலரில் கொங்கலாபுரம் அருகே சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, முத்துப்பாண்டி, சாமுவேல் டூவீலரில் வேகமாக வந்தனர். அவர்களைப் பார்த்துப் போங்கள் என்று கூறிய சீனிவாசனை தகாத வார்த்தை பேசி அடித்தனர். அப்போது அந்த வழியாக வந்த விஸ்வநந்தத்தை சேர்ந்த பழனிசாமியையும் தகாத வார்த்தை பேசி அடித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.