கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்
விருதுநகர்: அல்லம்பட்டி கண்ணபிரான் தெருவைச் சேர்ந்தவர் சத்தியபாலா 20. இவர் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் பி.காம். பயின்று வருகிறார். இவர் மார்ச் 13 மாலை 4:30 மணிக்கு கல்லுாரி முடித்து வந்த போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அருள்பதி தாக்கியதில் சத்தியபாலா காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி மூதாட்டி பலி
விருதுநகர்: ஆனைக்குட்டம் ஏ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் 62. இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி கொண்டு தனியாக வசித்து வருகிறார். இவர் மார்ச் 13 மாலை 4:15 மணிக்கு விருதுநகர் - சிவகாசி ரோட்டை கடந்து குப்பை கொட்டுவதற்காக சென்ற போது காரை ஓட்டி வந்த மதுரை மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மோதியதில் செல்லம்மாள் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் தற்கொலை
சிவகாசி: சிவகாசியில் இருவேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். சிவகாசி திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி மேலுாரைச் சேர்ந்தவர் மாயன் 44. இவருக்கு வீட்டுக்கடன் மற்றும் தனது மகளின் கல்யாண செலவு என கடன் இருந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்தவர் வீட்டின் அருகில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிவகாசி வி சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் 20. மூன்று ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் இருந்தவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் 33. இவர் சித்துராஜபுரம் பஸ் ஸ்டாப் அருகே தனது லோடு வேனில் அனுமதி இன்றி பட்டாசுகளை வைத்திருந்தார். டவுன் போலீசார் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள், லோடு வேனை பறிமுதல் செய்தனர்.
4 கி., கஞ்சா பறிமுதல்: பெண் கைது
ராஜபாளையம்: சத்திரப்பட்டி ரோட்டில் மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே பொன்னகரம் பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணை போலீசார் சோதனையிட்டதில், நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் வைத்திய லிங்காபுரத்தை சேர்ந்த சுந்தரி 56, திருமங்கலத்தில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிந்தது. கஞ்சா, அலைபேசியை கைப்பற்றி தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

