விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்
திருச்சுழி: அருப்புக்கோட்டை அருகே ராஜீவ்நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி சோனைமுத்து 41, இவர் நேற்று காலை தனது மனைவி கற்பகவள்ளி 38, மகள்கள் சுஸ்மிதா 13, அஜிதா 9, ஆகியோருடன் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) தன் சொந்த ஊரான திருச்சுழி அருகே உள்ள அம்பனேரியில் நடக்கும் கோயில் நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். காலை 8.30 மணிக்கு திருச்சூழி அருகே மேல கண்டமங்களம் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே அருப்புக்கோட்டையை நோக்கி வேகமாக வந்த லாரி மோதியதில் சோனைமுத்து சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த மூவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பட்டாசு திரி பறிமுதல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் பொன்ராஜ் 25, இவருக்கு சொந்தமான குழாய் கடையில் அரசு அனுமதியின்றி பட்டாசு திரி மற்றும் பேன்சி ரக வெடிகள் விற்பனைக்காக வைத்திருந்தார். அவ்வழியாக ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., கணேசமூர்த்தி பட்டாசு திரி, வெடிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சிவகாசி: திருத்தங்கல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 28. பல வியாபாரியான இவர் தனது டூவீலரில் வெம்பக்கோட்டை ரோட்டில் சென்ற போது கீழே விழுந்து காயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.