திருட்டு : 3 பேர் கைது
சாத்துார்: ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் செந்துாரன், 36. மேலக் காந்தி நகரில் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். கதவு உடைக்கப்பட்டு ஒர்க்ஷாப்பில் இருந்த ரூ7000 மதிப்பிலான பொருட்கள் திருட்டுப் போனது. விசாரணையில் ஆண்டாள்புரத்தை சேர்ந்த தென் ஹரிஹரன் , 24. மேலும் 16, 17 வயதுடைய இரு சிறுவர்கள் பொருட்களை திருடியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பொருட்களை மீட்ட சாத்துார் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
விருதுநகர்: பெரியகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 35. இவரது மனைவி செல்வராணி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. மனைவி தனது 5 வயது மகனுடன் தனியாக சென்று விட்டார். இதன்பின் தாயாரும் இறந்ததால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு உணவருந்தி விட்டு துாங்கச் செல்வதாக வீட்டின் மாடிக்குச் சென்றவர் மனைவியின் சேலையில் துாக்கிட்டு இறந்தார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
பாட்டி, பேரனுக்கு வெட்டு
விருதுநகர்: சூலக்கரை அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் முருகானந்தம், 48. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு மது போதையில் அவ்வழியாக வந்த 10ம் வகுப்பு மாணவரை வழிமறித்து கத்தியால் தாக்கினார். அதை தடுக்கச் சென்ற மாணவரின் பாட்டி ராஜலட்சுமியையும் 65, கத்தியால் வெட்டினார். இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சூலக்கரை போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

