ADDED : ஜூலை 07, 2025 02:30 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும் திருச்சுழி ரோடு அருகில் மெகா பள்ளம் இருப்பதால் பீதியுடன் செல்கின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதி வழியாக திருச்சுழி ரோடு செல்கிறது. இந்தப் பகுதியில் 2 மேல்நிலைப் பள்ளிகள், 2 துவக்க பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லுாரி, கலைக் கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் திருச்சுழி ரோடு வழியாக நடந்து பள்ளிக்கு வருவர். இந்த ரோட்டில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு அருகில் தனியார் பாலிடெக்னிக் எதிரே உள்ள ரோடு ஓரத்தில் வாறுகால் உள்ளது. இதன் மேல் சிமெண்ட் ஸ்லாப் பால் மூடியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கனரக வாகனம் ஏறியதால் ஸ்லாப் உடைந்து மெகா பள்ளமாகிவிட்டது.
ரோடு குறுகிய அளவில் இருப்பதாலும், ரோடு ஓரப்பகுதிகளில் நகராட்சியினர் குழாய் பணிக்காக தோண்டி மேடு பள்ளமாக செய்துவிட்டதால் மாணவர்கள் ரோட்டில் தான் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதில் மெகா பள்ளம் இருப்பதால் பீதியுடன் செல்கின்றனர். டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக வாறுகாலின் மேற்பகுதியை தரமான ஸ்லாப்புகள் அமைத்து மூட வேண்டும்.