/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டும் குழியுமான ரோடு, இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
/
குண்டும் குழியுமான ரோடு, இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
குண்டும் குழியுமான ரோடு, இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
குண்டும் குழியுமான ரோடு, இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி
ADDED : மார் 10, 2024 05:06 AM

காரியாபட்டி, ' : காரியாபட்டி கழுவனச்சேரியில் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்கள் விபத்து அச்சத்தில் இருப்பது, ரோடு சேதம் அடைந்துள்ளதால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதில் சிரமம், மயானத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதி, மின்கம்பம் சேதமடைந்துள்ளதால் உடைந்து விழும் ஆபத்து, பஸ் இயக்கியும் எந்தப் பயனும் இல்லாதது உள்ளிட்ட பாதிப்பால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி கழுவனச்சேரி அரசு உயர் நிலைப்பள்ளிக்கு கண்மாய் கரை வழியாக 1.5 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும். ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் மாணவர்கள் நடக்கும் போது இடறி விழுகின்றனர். மயானத்திற்கு செல்லும் ரோடு ஜல்லி கற்களாக, குண்டும் குழியுமாக உள்ளது. தகன மேடை, மேற்கூரை சேதமடைந்துள்ளது. இறுதிச் சடங்கு செய்ய தண்ணீர் வசதி இல்லாததால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மதுரையில் இருந்து காரியாபட்டி வழியாக கழுவனச்சேரிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை, இரவில் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் ஊருக்குள் வருவது கிடையாது. ஊருக்குள் உள்ள சில மின்கம்பங்கள் சேதம் அடைந்து கம்பிகள் தெரிகின்றன. இங்குள்ள மேல்நிலைத் தொட்டி கட்டி 35 ஆண்டுகளுக்கு மேலாகின. கட்டடம் வலுவிழந்து இருப்பதால் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. பாரம் தாங்காமல் எப்போது இடிந்து விழுமோ என்கிற விபத்து அச்சம் உள்ளது.
ஆபத்தான மின்கம்பங்கள்
வீரணன், தனியார் ஊழியர்: ஊருக்குள் உள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன. பலத்த காற்றுக்கு உடைந்து விழும் அபாயம் உள்ளது. ஆபத்தான சூழ்நிலை உள்ளதால் அச்சமாக இருக்கிறது. நடவடிக்கை எடுத்து, கூடுதல் தெரு விளக்குகள் பொருத்த வேண்டும். ரோடு மோசமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
பஸ் நேரத்தை மாற்ற வேண்டும்
சித்தநாதன், விவசாயி: மதுரையில் இருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு வரக்கூடிய நேரத்திற்கு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பெரும்பாலான நேரங்களில் ஊருக்குள் வருவதை தவிர்க்கின்றனர். நேரத்தை மாற்றியமைத்து மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும். மயானத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. மயானத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது.
இடியும்நிலையில் மேல்நிலைத் தொட்டி
குமராண்டி, விவசாயி: இங்குள்ள மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. இன்னும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வலுவிழந்து, நீர்க்கசிவு ஏற்பட்டு வருகிறது. எப்போது இடிந்து விழுமா என்கிற அச்சத்தில் மக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். அருகில் சிறுவர்கள் பள்ளி உள்ளது. ஆபத்தான சூழ்நிலை இருப்பதால் மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

