ADDED : மார் 11, 2024 05:11 AM
விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகர், பர்மா காலனியில் நேற்று மதிய நேரத்தில் நடந்த மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் கந்தக பூமி என்பதால் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் பலர் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து மாலை நேரத்தில் பஜாருக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
விருதுநகர் பாத்திமா நகர், பர்மா காலனி, முத்து தெரு, ராமச்சந்திரன் தெரு ஆகிய பகுதிகளில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. தேர்வு நேரத்தில் மின்தடை கூடாது என அரசு அறிவுறுத்தியும், நகர்ப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர். வெயில் நேரம் என்பதால் வீட்டில் கூட இருக்க முடியாமல் அனலில் மக்கள் தவிக்கின்றனர். எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்தடை நீடித்ததால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
தேர்வு நேரம் முடியும் வரை மின்தடையை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத வகையில் மின் பராமரிப்பு செய்ய நேர்ந்தால் மக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்து செய்ய வேண்டும்.

