/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை
/
நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை
நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை
நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை
ADDED : மார் 10, 2024 05:19 AM

அருப்புக்கோட்டை : ''அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த போதிலும் கூட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தேவையான நிதிகளை முதல்வர் ஒதுக்கி வருகிறார்,,,' என குடிநீர் திட்ட பணிகள் துவக்க விழாவில் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசினார்.
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்ட பணிகளை துவக்க விழா, அதற்கான பூமி பூஜை யில் பங்கேற்று அமைச்சர் நேரு பேசியதாவது:
நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பாக சிவகாசி மாநகராட்சிக்கு ரூ.90 கோடி, நகராட்சிகளான அருப்புக்கோட்டை ரூ. 584 கோடி், ராஜபாளையம் ரூ. 109 கோடி, சாத்தூர் ரூ. 23 கோடி், ஸ்ரீவில்லிபுத்துார் ரூ. 54 கோடி், விருதுநகர் ரூ.69 கோடி என, ரூ.839 கோடி அளவிலான திட்டங்கள் இந்த 3 ஆண்டு காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகளுக்கு ரூ.94.78 கோடிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 544 குடிநீர் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு தமிழ்நாட்டில் 4 கோடியே 53 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின், 3 ஆண்டுகளில் 2.35 கோடி மக்களுக்கு புதிய குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கி வருகிறோம்.
இனிய வரக்கூடிய காலங்களில் ஏழரை கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உறுதி செய்யப்படும். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டங்கள் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறும். நகராட்சி பகுதிகளில் அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கி குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். கடுமையான நிதி நெருக்கடியில் அரசு இருந்தாலும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதல்வர் முன்னுரிமை கொடுத்து நிதிகளை ஒதுக்கி வருகிறார். என்று பேசினார்.
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மிக அவசியமானது. திருச்சுழி தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளுக்கு புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என அமைச்சர் நேருவிடம் இந்த நிகழ்ச்சி வாயிலாக கோரிக்கை வைக்கிறேன் என்று பேசினார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:
அருப்புக்கோட்டை சாத்தூர் விருதுநகர் பகுதிகளுக்கு புதிய தாமிரபரணி குடிநீர் விநியோகம் இன்று துவக்கி வைக்கப்படுள்ளது. இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற நிலை மாறி, 2, 3 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் தாராளமாக வழங்கப்படும். மேலும் பழைய தாமிரபரணி குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் பகிர்மான குழாய்கள் சேதம் அடைந்து விட்டது. அவற்றை மாற்ற 80 கோடி நிதி தேவைபடுகிறது. நிதி ஒதுக்க அமைச்சர் நேருவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் பணிகள் செய்யப்பட்டால், பழைய திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிரச்சனை இல்லாமல் குடிநீர் பெறலாம் என்று பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் 60 பயனாளிகளுக்கு 3.74 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், தங்கபாண்டியன், ரகுராமன், சீனிவாசன், அசோகன், மான்ராஜ் எம்.பி., தனுஸ்குமார், சிவகாசி மேயர் சங்கீதா, அருப்புக் கோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள், கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நகராட்சி கமிஷனர் அசோக்குமார், பொறியாளர் கோமதி, ஏ. இ., முரளி செய்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் அயினான் நன்றி கூறினார்.
குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்காக நேற்று 9:30மணி முதல் - 10:30 வரை ராகு காலம் என்பதால், ராகு காலம் முடிந்த பின்பு, குடிநீர் திட்ட திறப்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

