/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரச்னையும் தீர்வும் மின் கட்டண வசூல் மையம் இல்லாததால் சிரமம் :ஏமாற்றத்தில் நரிக்குடி மக்கள்
/
பிரச்னையும் தீர்வும் மின் கட்டண வசூல் மையம் இல்லாததால் சிரமம் :ஏமாற்றத்தில் நரிக்குடி மக்கள்
பிரச்னையும் தீர்வும் மின் கட்டண வசூல் மையம் இல்லாததால் சிரமம் :ஏமாற்றத்தில் நரிக்குடி மக்கள்
பிரச்னையும் தீர்வும் மின் கட்டண வசூல் மையம் இல்லாததால் சிரமம் :ஏமாற்றத்தில் நரிக்குடி மக்கள்
ADDED : ஜூன் 07, 2025 01:06 AM
நரிக்குடி: நரிக்குடியில் ஒன்றிய அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 100க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக இருக்கிறது. வெளியூர் செல்ல நரிக்குடி வந்து தான் செல்ல வேண்டும். பல்வேறு பணிகளுக்காக நரிக்குடி வரும் மக்கள், மின் கட்டணம் செலுத்த 10 கி.மீ., தூரமுள்ள வீரசோழனுக்கு செல்ல வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே நரிக்குடியில் மின் கட்டண வசூல் மையம் செயல்பட்டு வந்தது. கட்டடம் சேதமடைந்ததால் தற்காலிகமாக வீரசோழனுக்கு மாற்றப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. மீண்டும் புதிய கட்டடத்தில் வசூல் மையம் துவக்கப்படும் என நுகர்வோர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மின் கட்டணம் செலுத்த வீரசோழனுக்கு அலைகின்றனர். ஒரு நாள் வேலை கெடுகிறது. மின் கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதி இருந்தாலும் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாக உள்ளனர். ஆன்லைன் விவரங்கள் தெரியாது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தவே விரும்புகின்றனர். அலைந்து கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் நேரம், பணம் விரையமாகிறது. நரிக்குடி துணை மின் நிலையத்தில் புதிய கட்டடமும் சேதமடைந்து வருவதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் கட்டணத்தால் சிரமம்:
மாரீஸ்வரன் தனியார் ஊழியர்.
நரிக்குடியில் செயல்பட்டு வந்த மின் கட்டண வசூல் மையம் மறுபடியும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ரூ. 100 கட்டணம் செலுத்த ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல கூடுதலாக ரூ.100 ரூபாய் செலவாகிறது. விவசாயிகளுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த தெரியாது. சில நேரங்களில் ஆன்லைனில் பணம் செலுத்தி விட்டோம் என்கிற மனநிலையில் இருப்பர். டெக்னிக்கல் பிரச்னையால் பணம் வரவாகாமல் திரும்ப வங்கி கணக்குக்கு வந்துவிடும். இது தெரியாது. அபராதம் விதிக்கும் போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆகவே தான் மறுபடியும் நரிக்குடியில் மின் கட்டண வசூல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட நாள் கோரிக்கை:
ராமச்சந்திரன், தனியார் ஊழியர்.
நரிக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. புதிதாக வசூல் மையம் கேட்கவில்லை. ஏற்கனவே செயல்பட்டதை தான் மறுபடியும் செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். கட்டடம் கட்டப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின. இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. அன்றாடம் உழைத்து பிழைப்பு நடத்தும் விவசாயிகள் அலைய முடியாமல் தவிக்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு :
நரிக்குடியில் மின் கட்டண வசூல் மையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 16 ஆண்டுகளாக காத்திருந்து ஏமாற்றத்துடன் உள்ளனர். வீரசோழனில் மின் கட்டண வசூல் மையம் செயல்படுவதால் எந்த பிரச்னையும் இல்லை. தீர்வு காண கூடுதலாக நரிக்குடியிலும் மின் கட்டண வசூல் மையம் செயல்படுத்தலாம். இதற்காக கட்டப்பட்ட கட்டடம் வீணாவதை தடுக்க முடியும். நுகர்வோரின் அலைச்சல் மிச்சமாகும். தேவையான நடவடிக்கை எடுப்பதே உரிய தீர்வாக இருக்கும்.
படங்கள் உண்டு.