ADDED : செப் 13, 2025 03:33 AM
சாத்துார்: சாத்துாரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல் பல்க்கு முதல் முக்குராந்தல் வரை மெயின்ரோட்டில் நாளுக்கு நாள் பாஸ்ட்புட், துணி, தள்ளுவண்டி, பழக்கடைகள் இருசக்கர வாகனத்திலும் லோடு வேன்களிலும், காய்கறி, பழங்கள், வெங்காயம், பூண்டு என பல்வேறு நடமாடும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
காலை முதல் மாலை வரை ரோட்டில் நின்று கொண்டிருக்கும் இந்த வாகனங்கள் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளன.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்க் முதல் முக்கு ராந்தல் வரை அமைக்கப்பட்டு உள்ள பேவர் பிளாக் ரோடும் மக்கள் நடமாடுவதற்காக அமைக்கப்பட்ட நடை மேடையும் ரோட்டோர வியாபாரிகளின் பிடியில் சிக்கி உள்ளது.
பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைமேடை முழுவதும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மக்கள் நடைமேடையில் நடக்க முடியாமல் ரோட்டில் நடந்து செல்லும்நிலை உள்ளது.
மெயின் ரோடு மட்டுமின்றி நகராட்சிக்கு சொந்தமான வடக்கு ரத வீதியிலும் கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
தனியார் கட்டடங்களில் வாடகைக்கு இருக்கும் வியாபாரிகளும் தங்கள் கடை முன்பு தகர செட்டு அமைத்து ரோடு வரை கடையை நீட்டித்து உள்ளனர்.
இந்த ரோடு வழியாக காய்கறி மார்க்கெட்டுக்கு லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள் லோடு வேன்கள் ஆட்டோக்கள் செல்லும் நிலையில் ரோடு வரை நீண்டிருக்கும் கடைகளால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியின்றி அவதிப்படும் நிலை உள்ளது.
முனிசிபல் காலனி கிழக்கு ரத வீதி நாடார் கீழத் தெருபாரதி நகர் பகுதி மக்கள் இந்த ரோடு வழியாக நகருக்கு வர வேண்டியுள்ள நிலையில்
முக்கு ராந்தலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மெயின் ரோட்டிலும் வடக்குரத வீதியிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத் திருக்கும் நிலை உள்ளது.
போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் டிராபிக் போலீசார் திணறும் நிலை உள்ளது.
தற்போது இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரோட்டின் ஓரத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்கள் இருசக்கர வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.
டிராபிக் போலீசார் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை ஓரத்தில் கயிறு அடித்து வைத்துள்ளனர்.ஆனால் அந்த கயிற்றை தாண்டியே பல இருசக்கர வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன.
இந்த நிலையில் ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாக நடமாடும் கால்நடைகளாலும் நாய்களாலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நடைமேடை ஆக்கிரமிப்பு ராமலிங்கம், தனியார் நிறுவன ஊழியர்: பல கோடி ரூபாய் மதிப்பில் மெயின்ரோட்டில் இருபுறமும் பேவர் ப்ளாக் பதித்து மக்கள் நடந்து செல்ல நடைமேடை அமைத்துள்ளனர்.
ஆனால் இந்த நடைமேடை முழுவதும் பூக்கடைகள், பாஸ்ட் புட், வடை கடைகள் ஓட்டல்கள் போடப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் நடந்து செல்வதற்கு வசதியின்றி மீண்டும் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் சிறிய லோடு ஆட்டோக்கள் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்கள் ஏற் படுகின்றன.
ரோட்டை ஆக்கிரமிக்காமல் கடைகள் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் நெரிசலால் அவதி வன மூர்த்தி, டெய்லர்: காலை, மாலை நேரங்களில் அதிகளவு பெற்றோர் நகரில் உள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை இறக்கி விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் வருகின்றனர்.
அகலமான ரோடு இருந்தும் ரோடு வரை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டு உள்ளதால் விலகுவது கூட இடம் இன்றி நெரிசலில் சிக்கி பெற்றோர்கள் அவதிப்படுகின்றனர்.
நகரில் பாதாள சாக்கடை திட்டக்குழாய், குடிநீர் பகிர்மான குழாய் என மெயின்ரோட்டின் கீழ் செல்கின்றன.
இதில் உடைப்பு ஏற்படுவதால் அடிக்கடி ரோட்டை தோண்டி நகராட்சி நிர்வாகம் பணிபுரிகிறது.
இதுபோன்ற தருணங்களில் நகரில் நெரிசல் மிக அதிகமாக ஏற்படுகிறது.இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றாமல் உள்ளது தான்.பள்ளிக் குழந்தைகள் பலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
தீர்வு மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள கடைகளை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்றி மக்கள் நெரிசல் இன்றி நடமாட விரைந்து நடவடிக்கை எடுப்பதே இப் பிரச்சனைக்கு தீர்வாகும்