sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிரச்சினையும், தீர்வும்

/

பிரச்சினையும், தீர்வும்

பிரச்சினையும், தீர்வும்

பிரச்சினையும், தீர்வும்


ADDED : மே 10, 2025 06:55 AM

Google News

ADDED : மே 10, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தின் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து பல ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது.

இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே குளத்தினை விரைந்து சீரமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம். ஆண்டாள் நீராடிய குளம் என்ற பெருமை பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் நடப்பது வழக்கம்.

மேலும் திருமுக்குளத்தில் தண்ணீர் முழு அளவில் நிரம்பும் போதெல்லாம் மாசி மாத தெப்ப திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

நகரின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த குளத்தில் ஒரு முறை தண்ணீர் நிரம்பினால் 3 ஆண்டுகளுக்கு நகரில் நிலத்தடி நீருக்கு பாதிப்பு இருக்காது.

தற்போது திருமுக்குளத்தின் நான்கு பக்கமும் உள்ள கரைகளின் தடுப்பு சுவர்கள் மற்றும் படிக்கட்டுகள் நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகிறது. குளத்தின் வடக்கு பக்க தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமுக்குளத்தின் நான்கு பக்கமும் தடுப்புச் சுவர் போல் கல்கட்டுகள் இருந்த நிலையில் வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள ரோடுகள் புதிதாக போடப்படும் போது குளத்தின் தடுப்பு சுவரை விட, ரோட்டின் உயரம் அதிகரித்து கனரக வாகனங்கள் செல்லும்போது அழுத்தம் தாங்காமல் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து வருகிறது.

படித்துறையில் நாளுக்கு நாள் சிமெண்ட் பூச்சுகள் விலகி வருகிறது. நான்கு பக்கமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.

இதனை சீரமைக்க வேண்டுமென உள்ளூர் மக்களும், ஆண்டாள் பக்தர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதனையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தாலும் அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக இதுவரை குளம் சீரமைக்கப்படாமல் சிதைந்து வருகிறது.

மேலும் பழமை வாய்ந்த கோயில் குளங்களை சீரமைக்க வேண்டும் எனில் தொல்லியல் துறையின் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து, அதன் அடிப்படையில் மாவட்ட, மண்டல குழுக்களின் ஆய்வு நடத்தப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படும் பாரம்பரிய கமிட்டியின் அனுமதி பெறப்பட்டு அதன் பின்னரே குளத்தை சீரமைக்க வேண்டுமென அரசின் வழிகாட்டு விதிமுறைகள் உள்ளதால் தற்போது குளத்தை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் கரைகள் மேலும் பலவீனம் அடைந்தும், படித்துறைகளில் செடி கொடிகள் வளர்ந்து விரிசல் ஏற்படும் நிலையும் காணப்படுகிறது. எனவே, குளத்தினை விரைந்து சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகளும், மாவட்ட அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கோயில் குளங்களை காப்பது அவசியம்


சரவணகார்த்திக், நிர்வாகி, விஷ்வ ஹிந்து பரிஷத்: நகரில் உள்ள திருமுக்குளம், திருப்பாற்கடல், சக்கரைகுளம், நாடக சாலை திருவேங்கடமுடையான் கோயில் ஆகிய குளங்களில் தண்ணீர் நிரம்பும்போது நகரின் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

திருமுக்குளத்தில் தண்ணீர் இருந்தால் ஏழை எளிய மக்கள் குளித்து வருகின்றனர்.

இத்தகைய குளம் சேதமடைந்து பல ஆண்டுகளான நிலையில் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மேலும் குளத்தின் கட்டுமானம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, கோயில் குளங்களை காப்பது அவசியம். இதற்கு அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காலதாமதமின்றி சீரமைக்க வேண்டும்


-சரவணதுரை, கிழக்கு மாவட்ட பா. ஜ., தலைவர்: மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இதே போன்ற குளங்களை தற்போது எளிதாக கட்ட முடியாது. எனவே, தற்போதைய திருமுக்குளத்தை பாதுகாப்பது உடனடி அவசியம்.

நான்கு பக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், குளத்தின் தடுப்புச் சுவர்களை உயர்த்தி கட்ட வேண்டும்.

ஏற்கனவே ஆய்வுகள் முடிந்து டென்டர்கள் விடப்பட்ட நிலையில் மாநில அரசு நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி திருமுக்குளத்தை காலதாமதமின்றி சீரமைப்பது அவசியம்.

ரூ.5.6 கோடியில் திட்ட மதிப்பீடு


சக்கரை அம்மாள், செயல் அலுவலர்: திருமுக்குளத்தின் நான்கு பக்கமும் தடுப்பு சுவர்கள் கட்டி படித்துறைகளை சீரமைத்து முழு அளவில் புனரமைக்க கோவில் நிர்வாகத்தின் சார்பில் ரூ.5.6 கோடியில் திட்ட மதிப்பீடு அரசின் அனுமதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும்.






      Dinamalar
      Follow us