ADDED : ஆக 14, 2026 05:32 PM
டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை
*சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக. 15-
ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் இருந்தாலும் அதற்குரிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது.
நகரில் பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும் அதிகளவில் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
சாதாரண நாட்களில் தினமும் 800க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், மழைக்காலங்களில் 1200க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக இருப்பதால் கடும் இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இங்குள்ள ஆண், பெண்கள் வார்டு மிகவும் பழமையான கட்டத்தில் அமைந்துள்ளதால் கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட முடியாத நிலை உள்ளது. மேலும் வெளி நோயாளிக்கான சிகிச்சை பிரிவு தற்போது ஒரு தகர செட்டில் தான் இயங்குகிறது. இதனால் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குழந்தைகள் பிரிவுக்காக கட்டப்பட்ட புதிய கட்டடத்தின் அருகே போஸ்ட்மார்ட்டம் அறை இருப்பதால் பெண்கள், குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.
இங்கு பல், மனநலம், தோல், கண், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, எலும்பு, இதயம் உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ள நிலையில், 18 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது 12 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். சிறப்பு மருத்துவ பிரிவு டாக்டர்கள் இல்லை.
அலுவலக உதவியாளர், தலைமை மருந்தாளுநர், துணை செவிலியர், மகப்பேறு உதவியாளர், டிரைவர், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் இருந்து உழவர் சந்தை வழியாக அரசு மருத்துவமனைக்கு வரும் ரோடு தோண்டி போட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் பஜார் வீதிகளை சுற்றி வர வேண்டிய நிலை இருப்பதால் உயிர் காக்கும் சிகிச்சை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதேபோல் மருத்துவமனைக்கு வடக்கு பகுதியில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் நகராட்சி நிர்வாகமே சைக்கிள் ஸ்டாண்ட் அமைத்து பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனைக்கு மக்கள் வருவதை சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிகளவில் வெளி நோயாளிகள், பிரசவம் போன்றவற்றிற்காக வருபவர்களுக்கு போதிய ஓய்விடம், சுகாதார வளாகம், தண்ணீர் போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
* பணியாளர்கள் இல்லை
மாவட்டத்தில் மக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நித்யானந்தம், சுய தொழில் முனைவோர்.
* ஆக்கிரமிப்புகளால் தொல்லை
தீ விபத்து, வாகன விபத்து, மாரடைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்சில் எளிதில் கொண்டு வர முடியாத அளவிற்கு ரோடு ஆக்கிரமிப்புகள், வாகன நெருக்கடி காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. எனவே, உயிர் காக்கும் சிகிச்சை பெறுபவர்கள் வரும் வகையில் அவசர வழி ஏற்படுத்த வேண்டும்.
- மாரிமுத்து, தனியார் ஊழியர்.
தீர்வுகள்:
* உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பிற வட்டார மக்களும் அதிகளவில் சிகிச்சை பெற வருவதால் கூடுதல் டாக்டர்கள், சிறப்பு பிரிவு டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மருத்துவ உதவியாளர்கள் நியமிக்க வேண்டும். உழவர் சந்தை வழியாக ஆம்புலன்ஸ்கள் எளிதில் வரும் வகையில் அவசர வழி ஏற்படுத்த வேண்டும். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில்கூடுதல் கட்டிட வசதிகள், குடிநீர், சுகாதார வளாகம், ஓய்வறை போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
