ADDED : அக் 23, 2026 07:39 PM
ஆண்டுகள் கடந்தும் பணிகள் முடியாத ரயில்வே மேம்பாலம்.
* கோடிகள் செலவழித்தும் பயன் இல்லை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு புறவழி சாலையில், கோபாலபுரம் அருகில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி ஆண்டு கணக்கில் நடப்பதால் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்தும் சாலை பயனின்றி கிடக்கிறது.
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2016 ல் நெடுஞ்சாலைத் துறை சிறு துறைமுகங்கள் துறை இணைந்து 66 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி 300 கோடி ரூபாயில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், 2023 ல், ரோடு அமைக்கும் பணி நடந்தது. புறவழி சாலையை பயன்படுத்தி அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல் பந்தல் குடியிலிருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் செல்ல முடியும். மதுரை –- தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் புறவழிச் சாலை பயன்படுத்தி செல்லலாம். விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை எல்லை பகுதியில் உள்ள சுக்கிலநத்தம் ரோடு வழியாக மதுரை - தூத்துக்குடி நாற்கர நான்கு வழி சாலையில் செல்லலாம். இதேபோன்று நகர் எல்லையில் இருந்து கோபாலபுரம் வழியாக மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலையில் செல்ல முடியும்.
* பிரச்சனை :
அருப்புக்கோட்டை எல்லை பகுதியிலிருந்து சுக்கிலநத்தம் செல்லும் புறவழிச் சாலை பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், கோபாலபுரம் வழியாகச் செல்லும் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதற்கான பில்லர் போடும் பணிகள் முடிவடைந்த நிலையில் கர்டர்கள் பொருத்தப்பட வேண்டும். பாலத்திற்கு ஐந்து கார்டர்கள் ஒவ்வொன்றும் 70 டன் எடையில் அரக்கோணத்தில் தயாராகின்றது. பணிகள் மெத்தனமாக நடப்பதால் 3 ஆண்டுகளாகியும் சாலை தயாராக இருந்தும் பால பணிகள் தாமதத்தினால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. பாலம் முடிவடையாத நிலையில் 6 மாதத்திற்கு முன்பு இரவு நேரத்தில் டூவீலரில் வந்த ஒருவர் தெரியாமல் இந்த ரோட்டில் வந்து விழுந்து உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் ரோட்டில் குளிக்க சுவர் ஒன்றை கட்டியுள்ளனர். ரோட்டை பயன்படுத்தாததால் இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். மேலும் ரோடு பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து பல பகுதிகளில் பஞ்சர் பார்த்துள்ளனர். இதனால் ரோட்டின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.
* தீர்வு :
ரயில்வே நிர்வாகம் பாலத்தை கட்டுவதற்கு உரிய அனுமதியை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து விட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணியில் அக்கறை எடுப்பது இல்லை. இதனால் 159 கோடி ரூபாய் செலவழித்து ரோடு அமைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சுக்கில நத்தம் ரோட்டின் பல பகுதிகளில் சேதமடைந்து பஞ்சர் பார்க்கும் பணி நடந்துள்ளது. 2 பகுதிகளில் போடப்பட்ட ரோட்டின் தரத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். பாலப்பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
* பயன் இல்லை
அழகர்சாமி, சமூக ஆர்வலர் : அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோடு புறவழிச்சாலையால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். ரோட்டின் ஒரு பகுதி திறக்கப்படாததால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. கோபாலபுரம் பகுதியில் பாலத்தை விரைவாக முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இந்தப் பகுதியில் போடப்பட்ட ரோடும் பல பகுதிகளில் சேதமடைந்து கிடக்கிறது. கோடிகள் செலவழித்தும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.
* கிடப்பில் போடப்பட்ட பணிகள்
சீத்தாராமன், தனியார் நிறுவனம் : புறவழி சாலை ஒரு பகுதியான கோபாலபுரம் வழியாக செல்லும் ரோட்டில் உள்ள மேம்பால பணிகள் அரைகுறையாக நிற்கிறது. பில்லர்களில் கர்டர்கள் பொருத்தும் பணி எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. விரைவில் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படம் உள்ளது
