/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிக்கல்: நடவு பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: அதிக கூலி கொடுத்தும் ஆட்கள் கிடைக்காத நிலை
/
சிக்கல்: நடவு பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: அதிக கூலி கொடுத்தும் ஆட்கள் கிடைக்காத நிலை
சிக்கல்: நடவு பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: அதிக கூலி கொடுத்தும் ஆட்கள் கிடைக்காத நிலை
சிக்கல்: நடவு பணிகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை: அதிக கூலி கொடுத்தும் ஆட்கள் கிடைக்காத நிலை
ADDED : அக் 12, 2024 04:09 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் வட்டாரத்தில் விவசாய பணிகளுக்கு அதிக ஆட்கள் தேவைப்படும் நெல் நடவு தொடங்கியுள்ள நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அதிகர கூலி கொடுத்தும் கிடைக்காததது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
மூன்று ஆண்டுகளாக வழக்கத்தைவிட பருவ மழை அதிகம் பெய்துள்ளதால் பருவ காலங்களில் கண்மாய்கள் நிறைந்தும் மற்ற நேரங்களில் நிலத்தடி நீர்மட்டத்தினால் கிணறுகளில் நீர் அதிகரித்தும் காணப்படுகிறது.
இதனால் தரிசாக வைத்திருந்த பல நுாறு ஏக்கர் பாசன பகுதிகளும் விவசாய சாகுபடிக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தேவதானம் சேத்துார் பகுதிகளில் 3000 ஏக்கருக்கும் அதிகமான நெல் சாகுபடி பரப்பில் 50 நாட்களுக்கு முன்பே நாற்றாங்காலுக்கான விதை பாவி வைத்திருந்தனர்.
கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருவதைஅடுத்து நாற்றாங்காலில் இருந்து நாற்றுக்களை பிடுங்கி நடவு பணிகளுக்கு ஆட்களை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சேர பணிகளை தொடங்கியுள்ளதால் விவசாயத்திற்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
வேறு வழியின்றி தொலைதூர கிராமங்களில் இருந்து வாகனங்களை அமர்த்தி முன்பதிவு செய்து அட்வான்ஸ், கூலி அதிகம் கொடுத்து அழைத்து வருகின்றனர்.
நெல் விவசாயத்தில் வரப்பு எடுத்தல், நாற்றுப்பாவுதல் முதல் அறுவடை வரை ஆட்கள் அதிகம் தேவைப்படுவதால் தகுந்த காலங்களில் தேவையான கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.
நுாறு நாள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால் விவசாயக் கூலிக்கு பற்றாக்குறை என்பது தொடர் கதையாக உள்ளது. சுற்று வட்டாரங்களில் பல்லாயிரம் ஏக்கர் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை சமாளிக்க சாகுபடி காலங்களில் அரசும் நுாறு நாள் வேலை திட்ட பணியாட்களை விவசாய பணிகளுக்கு அனுப்ப வேண்டுமென எதிர்பார்த்து உள்ளனர்.
கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இச் செயல்பாடு நடைமுறையில் உள்ளது போல் தமிழகத்திலும் அதை கொண்டு வந்தால் சாகுபடி பரப்பில் தயக்கம் இன்றி விவசாயிகள் ஈடுபட ஏதுவாகும் என கருதுகின்றனர்.
அறுவடைக்கு ஓரளவு இயந்திரங்கள் வந்துவிட்ட நிலையில் நடவு மிஷின்கள், வரப்பு எடுத்தல் உள்ளிட்ட மற்ற பணிகளுக்குமான இயந்திரங்களுக்கு அதிக மானியம் வழங்கி விவசாய குழுக்கள் மூலம் மாற்று தீர்வு காண வேண்டும்.