/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நீர் பிடிப்பு பகுதிகளை முறையாக பராமரித்தால் கண்மாய்களில் தண்ணீர் வரும்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
நீர் பிடிப்பு பகுதிகளை முறையாக பராமரித்தால் கண்மாய்களில் தண்ணீர் வரும்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
நீர் பிடிப்பு பகுதிகளை முறையாக பராமரித்தால் கண்மாய்களில் தண்ணீர் வரும்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
நீர் பிடிப்பு பகுதிகளை முறையாக பராமரித்தால் கண்மாய்களில் தண்ணீர் வரும்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : செப் 04, 2024 06:48 AM
ஒரு காலத்தில் கண்மாய்கள் அந்தந்த பகுதிகளின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து வந்தன. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்பட்டன. நாளடைவில் இவற்றை பராமரிக்காமல் போனதால் மாவட்டத்தில் பல கண்மாய்கள் வறண்டு போனது.
பொதுப்பணித்துறைக்கும், ஊராட்சிகளுக்கும் கட்டுப்பட்ட பல கண்மாய்கள் முறையான பராமரிப்பு இன்றிசீமை கருவேல மரங்கள் வளர்ந்தும் முட்புதர்கள் சூழ்ந்தும் உள்ளது.
மேலும் கண்மாய்களின் நீர் பிடிப்பு பகுதிகள் பெரும்பாலானவை அழிந்து போய்விட்டன. அரசு கண்மாய்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து அதற்கான நிதி ஒதுக்கி கண்மாய்களில் கரைகள் உயர்த்தவும், தூர்வாரும் பணிகள் மட்டும் செய்யப்படுகின்றன.
கண்மாய்களின் முழுமையான பரப்பளவு, இவற்றிற்கு வரும் நீர்வரத்து ஓடைகள் ஆகியவற்றை கண்டுபிடித்து அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்டத்தில் பல கண்மாய்களின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு அழிந்து விட்டன. இன்னும் சில நீர் பிடிப்பு பகுதிகள் பட்டாக்கள் போடப்பட்டு விட்டன. கண்மாய்களை தூர் வாருவதோடு மட்டுமல்ல அவற்றின் நீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருப்புக்கோட்டையில் செவல் கண்மாய் தூர்வாரி அதிலுள்ள ஆகாய தாமரைகள் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு சுற்றி கரைகள் அமைக்கப்பட்டு கோடிக்கணக்கான நிதியில் பணிகள் நடக்கிறது.
அத்தோடு கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகளையும் கண்டுபிடித்து அவற்றையும் பராமரிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும்.
இதேபோன்று நகரில் உள்ள பெரிய கண்மாயும் தூர்வாரப்பட உள்ளது.
இந்தக் கண்மாயின் மலையரசன் கோயில் பகுதியில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகள் பட்டாக்கள் போட போட்டு புறநகர் பகுதியாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளையும் அகற்ற வருவாய் துறையும் நகராட்சியும் பொதுப்பணி துறையும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சநாயக்கன்பட்டி அருகில் உள்ள தும்பை குளம் கண்மாயையும் தூர்வாரி அதற்குரிய நீர் பிடிப்பு பகுதிகளை பராமரிக்க வேண்டும்.
கண்மாய்களை மட்டும் தூர்வாரி எந்தவித பலனும் இல்லை. நீர் பிடிப்பு பகுதிகளை கண்டுபிடித்து அவற்றையும் முறையான பராமரிப்பு செய்து கண்மாய்களில் தண்ணீர் வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்.