ADDED : அக் 01, 2024 04:35 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மா.கம்யூனிஸ்ட் சார்பில் நகராட்சி 42 வது வார்டு திருவள்ளுவர் நெசவாளர் காலனி மக்களுக்கு மயான பாதை கோரி தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.
நகராட்சிக்கு உட்பட்ட 42 வது வார்டில் திருவள்ளுவர் நெசவாளர் காலனியில் 100க்கும் மேற்பட்ட பட்டியல் பிரிவை சேர்ந்த குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அருகில் உள்ள சமுசிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேல இலுப்பிலாங் குளம் கண்மாய் புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இப்ப பகுதிக்கு 40 ஆண்டுகள் ஆகியும் பாதை வசதி செய்து தரவில்லை என கூறி ஜன. மாதம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, வருவாய் துறையினர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில் 9 மாதம் கடந்தும் நடவடிக்கை இல்லை என கூறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததால் சமாதானம் ஆகினர்.