/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்; ஊழியர்கள் போராட்டம்
/
பி.டி.ஓ.க்கள் இடமாற்றம்; ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 23, 2024 05:35 AM
அருப்புக்கோட்டை: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றத்தினாலும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாலும் பணம் பெற முடியாமல் ஒப்பந்ததாரர்கள் தவிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். இவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு திட்டங்களின் மூலம் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனர். பணி முடிந்ததும் பில் பாஸ் செய்து பணம் பெறுவர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்து முடித்துவிட்டு ஒப்பந்ததாரர்கள் அதற்கான பணத்தை பெற முடியாமல் பல மாதங்களாக ஒன்றிய அலுவலகங்களில் நடையாய் நடக்கின்றனர்.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த ஒன்றியங்களில் பொறுப்பேற்பதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் தண்ணீர் குழாய் உடைந்து நிழற்குடையில் பொங்கிய பிரச்சனையில் நரிக்குடியில் ஒன்றிய பி.டி.ஓ., மற்றும் பொறியாளரை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார்.
இதை கண்டித்து ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கடந்த 4 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் லோக்சபா தேர்தல் அறிவிக்கபடும் நிலையில், செய்து முடித்த பணிக்கு பில் பாஸ் ஆகுமா, என்ற பீதியில் ஒப்பந்தகாரர்கள் உள்ளனர்.
வட்டிக்கு வாங்கி பணிகள் செய்கிறோம். குறித்த நேரத்தில் தாமதமின்றி பணம் கிடைத்தால் தான் நாங்கள் பிழைப்பு நடத்த முடியும் என ஒப்பந்தகாரர்கள் புலம்புகின்றனர்.