ADDED : ஆக 03, 2025 04:33 AM

விருதுநகர் : விருதுநகரில் காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மதியம் வேளையில் பெய்ய துவங்கி மழை அடுத்த ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை வழக்கம் போல வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் மதியம் வேளையில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் மழை மேக மூட்டங்கள் தென்பட்டது.
அருப்புக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், சிவகாசியில் லேசான மழை பெய்தது. ஸ்ரீவில்லிப்புத்துாரில் காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டு மதியம் 1:00 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது.
விருதுநகரில் காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மதியம் 1:00 மணி முதல் மேகமூட்டம் தென்பட்டு மதியம் 2:00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கியது. இதனால் பகல் நேர வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு மாறியது.

