ADDED : ஏப் 03, 2025 05:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துஉள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் போதிய மழை இல்லாமல் செடி, கொடிகள் காய்ந்து சருகாகி காணப்பட்டது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் நிலை உருவாகி வந்தது.
மலைப்பகுதியில் நீர் ஆதார பகுதிகள், ஓடைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் யானைகள், மான்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் போதிய தண்ணீர் இன்றி தவித்து வந்தன.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையிலும், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைப்பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மேல் 9:00 மணி வரை பலத்த சாரல் மழை பெய்தது. இதனால் ஓடைகளில் குறைந்த அளவு நீர் வரத்து ஏற்பட்டது. காய்ந்து கிடந்த செடி கொடிகள் குளிர்ந்த தன்மையுடன் காணப்பட்டது.
பெரியாறு அணையில் 4.4 மி. மீ., கோவிலாறு அணையில் 8 .6 மி. மீ. மழையும், வத்திராயிருப்பில் 72.2 மி.மீ. மழையும் பதிவானது.
மலையில் பெய்த மழையின் காரணமாக வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

