/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலத்திற்காக பாழாக்கிய மழைநீர் வரத்து ஓடை
/
பாலத்திற்காக பாழாக்கிய மழைநீர் வரத்து ஓடை
ADDED : நவ 13, 2024 11:42 PM

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே புறவழி சாலையில் பாலம் அமைக்க மழை நீர் வரத்து ஓடையை சேதப்படுத்தியதால் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.154 கோடி நிதியில் சுற்று சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நடந்து வருகிறது. 10 கி.மீ., துாரமுள்ள இந்த புறவழி சாலையில் சுக்கிலநத்தம் செல்லும் ரோடு பகுதியில் ஒரு பாலம் அமைத்துள்ளனர். இதற்கு பாலத்தின் கீழ் வழியாக செல்லும் மழை நீர் வரத்து ஓடையை சேதப்படுத்தியுள்ளனர்.
ரோட்டின் இருபுறமும் சமப்படுத்துவதற்கு ஓடையில் உள்ள மண்ணை அள்ளி சமன்படுத்தி உள்ளனர். முன்பு இந்த ஓடை வழியாகத்தான் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வருவர். ஓடையில் தான் டிராக்டர் செல்லும். தற்போது ஓடையை சேதப்படுத்தி விட்டதால் மழை நீர் முறையாக வருவதில்லை. மழை காலங்களில் பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் தேங்கி அருகில் உள்ள விவசாய நிலத்தில் செல்வதால் பயிர்கள் பாழாகிறது என விவசாயிகள் புலம்புகின்றனர்.
இது குறித்து புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: நீர் ஓடையை சிதைத்து பாலம் கட்டியுள்ளனர். ஓடையில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி விவசாய நிலங்களுக்குள் சென்று விடுகிறது. புறவழிச் சாலைக்காக எங்களது நிலத்தை கையகப்படுத்தினர். இந்த ரோடால் எங்களது விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று முன்தினம் இந்த ரோட்டை ஆய்வு செய்ய வந்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவிடம் மழைநீர் வரும் ஓடையை சரி செய்தும், இருபுறமும் தடுப்புச் சுவர் கட்டியும், விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைக்கவும் கோரிக்கை வைத்தோம். ஆனால் அமைச்சர் அதிகாரிகளிடம் கையை காட்டி விட்டு சென்று விட்டார். பன்றிகளால் பயிர்கள் பாழாகும் சூழலில் தற்போது ஓடையையும் சிதைத்து துயரத்தில் ஆழ்த்தி உள்ளனர், என்றனர்.