/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்ட ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்- -பயணிகள் அவதி
/
அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்ட ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்- -பயணிகள் அவதி
அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்ட ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்- -பயணிகள் அவதி
அடிப்படை வசதிகளின்றி திறக்கப்பட்ட ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்- -பயணிகள் அவதி
ADDED : ஜூன் 03, 2025 12:28 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே 29ல் திறக்கப்பட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடித்து நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடிக்கு புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.
2022 டிச. மாதம் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு கடைகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் தொடங்கி கூடுதல் பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
2 ஆண்டுகளைக் கடந்து மே 29ல் திறக்கப்பட்டது. இதில் 23 கடைகள், 2 ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் அவுட்போஸ்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.
இந்நிலையில் தினமும் 50க்கும் அதிகமான டவுன் பஸ்கள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பிற்கு போலீஸ் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள், பஸ் டிரைவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்.
பயணிகள் கூறுகையில், இரண்டு ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். தற்போது எந்த வசதியும் செயல்படுத்தாமல் அவசர கதியில் திறந்திருப்பது யாரை திருப்தி படுத்த என தெரியவில்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகள் கழிப்பறை இல்லாமல் படும் சிரமத்தை அதிகாரிகள் சந்தித்ததால் தான் தெரியும், என்றனர்.