ADDED : ஏப் 07, 2025 06:40 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. விருதுநகர் ரயில்வே பீடர் ராமர் கோயிலில் கலசம் வைத்து ஹோமம் வளர்க்கப்பட்டது. காலை 9:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் செய்து பட்டாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகாசி பெருமாள் கோயிலில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதேபோல் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் சுவாமிகளுக்கு பூஜை நடந்தது. ஈஞ்சார் ஆஞ்சநேயர் கோயிலில் ராமர் லட்சுமணன் சீதாவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
* ராஜபாளையம் புதுப்பாளையம் கோதண்டராமசாமி கோயில், பழைய பாளையம் ராமசுவாமி கோயில், பெரிய கடை பஜார் பஜனை மடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ராமர் கோயில்களில் மூலவருக்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி லட்சுமிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று ராம நவமியை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் திருக்கல்யாண மகோற்ஸவம் நடந்தது. சுவாமிகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பூஜைகள், யாகசால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூப்பந்து உருட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.