/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை - -புனலுார் மலை ரயில் பாதையில் 'விஸ்டாடோம்' கண்ணாடி கூரை பெட்டிகள் ரயில் * இயக்க ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை

ADDED : மே 02, 2025 01:59 AM

ராஜபாளையம்:இயற்கை எழில் ததும்பும் செங்கோட்டை -- புனலுார் மலை ரயில் பாதையில் 'விஸ்டாடோம்' கண்ணாடி கூரை பெட்டிகளுடன் ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தை கேரள மாநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய ரயில் வழித்தடங்களில் செங்கோட்டை - -புனலுார் வழித்தடம் பயணிகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். 1904 முதல் பயன்பாட்டில் உள்ள 49.38 கி.மீ., மொத்த பயண துாரத்தில் மலையை குடைந்து 7 குகைகளும், 23 பெரிய பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 60 அடி உயரம் கொண்ட 13 கண் பாலம் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். அதிகமான வளைவுகள் உள்ளதால் 14 பெட்டிகளுடன் பாதுகாப்பு கருதி மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் எழில் கொஞ்சும் இந்த மலைப்பாதையில் சரிவுகளையும் பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிப்பதற்காக கண்ணாடி கூரை, அகலமான ஜன்னல்களுடன் கூடிய 'விஸ்டாடோம்' பெட்டிகளை இணைத்து இயக்க மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையையடுத்து அதிகாரிகள் ரயில்வே வாரியத்திற்கு இதுகுறித்து பரிந்துரை செய்துள்ளனர்.
ரயில் பயணிகள் கூறியதாவது: நாட்டில் மொத்தம் 33 விஸ்டாடோம் ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ள இவ்வகையான சிறப்பு பெட்டிகள் நீலகிரி மலை ரயில், டார்ஜிலிங், கோவா, சிம்லா உள்ளிட்ட ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன.
கூரை, பக்கவாட்டில் பெரிதான கண்ணாடி அமைப்பினாலும், சுழலும் வகையிலான இருக்கைகள், குறைந்த வேகத்தில் செல்வதாலும் இயற்கை அழகை ரசித்தபடியே பயணிக்க முடியும். ஏற்கனவே கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக இப் பெட்டியை இயக்கிய நிலையில் தற்போது ரயில்வே வாரியத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெறும் என்றனர்.